இலக்கண மரபுப்படி எழுதப்படும் செய்யுள், கவிதை என்று அழைக்கப்படுகிறது. செய்யுள் என்பது செய்யப்படுவது என்ற பொருளில் தொல்காப்பியர் காலந்தொட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது. கவிதை என்ற சொல். பிற்காலத்தில்தான் வழக்கிற்கு வந்துள்ளது.
இன்று, இலக்கண மரபின்படி அமையும் எந்திரமயமான ஆக்கத்தைச் செய்யுள் என்றும், களித்துவம் உடையவை கவிதை என்றும் நாம் வேறுபடுத்திக் கூறுகிறோம். ஆனால், இரண்டு சொற்களும் ஒரே பொருளில் இலக்கண மரபிற்கு உட்பட்டது வழங்கி வருகிறது.
எந்தவிதமான தொடர்பும் இல்லாமல், தனித்தனியாக ஒவ்வொன்றும் அதனதன் அளவில் முழுமையுடையதாக அமையும் கவிதை தனிச் செய்யுள் எனப்படுகிறது. ஒரு கருத்தையோ அல்லது ஓர் உணர்ச்சியையோ வெளிப்படுத்துவதாகக் கவிதை அமையும், சொல், நுட்பமான பொருள், ஓசை, கற்பனை, உணர்ச்சி, வெளியீட்டுத் திறன் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது கவிதை.
கவிதை என்றாலே யாப்பிலக்கணப்படி அமைந்த மரபுக் கவிதை என்பதை நாம் மறக்கக் கூடாது. கவிதைக்குப் பலரும் பலவிதமான விளக்கங்கள் கூறியுள்ளனர். ஆனாலும், கவிதை என்பது இதுதான் என்ற வரையறுத்த இலக்கணம் இல்லை.
சிறந்த சொற்களைச் சிறந்த வரிசையில் அமைப்பது கவிதை என்று மேனாட்டார் விளக்கம் கூறுகின்றனர். மேலாகப் பார்த்தால் எளிமையும் தெளிவும் விளங்க, உள்ளே ஆழ்ந்து அகன்ற நுண்ணிய பொருளை உடையதாக இருப்பது கவிதை என்று நம் மரபில் கூறுகின்றனர்.
சுவிதையில் கவிஞன் கூற எண்ணிய பொருள் நுட்பமாக மறைந்து கிடக்கும். வாசகன் தான் அதைத் தேடிக்கண்டு சுவைக்க வேண்டும். தனிச் செய்யுள் - தனிக்கவிதை என்ற இலக்கிய வகை மிகத் தொன்மையானது.
சங்க - காலம் முதல், இன்றுவரை தனிச்செய்யுள் காணப் படுகிறது. முன்னும் பின்னும் தொடர்பின்றி, ஒரு பாடல் அளவிற்குள்ளாகத் தாம் கூற எண்ணிய கருத்தை (அல்லது உணர்ச்சியை) வெளிப்படுத்துவது இதன் இயல்பு. இதற்கேற்பச் சொல்லும் பொருளும், பிற உறுப்புக்களும் துணை செய்யுமாறு தனிச் செய்யுள் அமையும்.
தனிச் செய்யுளின் வகை
தனிச்செய்யுள், பல்வேறு வகைகளை உடையதாக நம் மரபில் உள்ளது. பெரும்பாலும், உள்ளடக்கப் பொருளை மையமிட்டு, தனிச்செய்யுள் வகைப் படுத்தப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய மரபில் சங்ககாலக் கவிதை முதல் இன்று வரை உள்ள கவிதைகள் யாவும் இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சங்ககாலத்தில் அகம், புறம் என்று இருவிதமான கவிதை வகைகள் காணப் பட்டன. காதல் உணர்வு பற்றிய பாடல்கள் அகம் எனவும், ஏனைய அனைத்தும் புறம் எனவும் வகை செய்யப்பட்டன. இந்தப் பாகுபாட்டில், கவிதையின் அடிவரையறை கணக்கில் கொள்ளப்படவில்லை.
சான்றாக, ஐங்குறு நூறு,குறுந்தொகை போன்ற குறைந்த அடிகளையுடைய பாடல்கள் முதல் நீண்ட அடிகளையுடைய அகநானூறு, கலித்தொகை போல்வன. இதே போலத்தான். புறம் என்பதில் புறநானூறு, பதிற்றுப் பத்து என்பவை அமையும்.
பின்னர், நீதி கூறும் பாடல்கள் யாவும் ஒரே வகையாக நீதி இலக்கியம் என்று -கொள்ளப் பட்டது. தமிழ் மரபில் பின்னர் ஏராளமான நீதி நூல்கள் தோன்றின. இவை யாவும் இந்த வகையில் அமைந்துவிடும். மிகப் பிற்காலத்தில் மாயூரம் வேத நாயகம் பிள்ளை பாடிய நீதிநூல் என்பது உட்பட பல கவிதைகள் இவ்வகையைச் சார்ந்தவை.
சமயப் பாடல்கள் மற்றொரு வகை, சங்ககாலப் பரிபாடல், திருமுருகாற்றுப்படை, பக்தி இயக்க காலக் கவிதை முதல் இன்று பாடப்படும் சமயக் கவிதை வரை யாவும் இவ்வகை சார்ந்தவை. அரசன் புகழ்பாடும் (அரசனுக்கு மாற்றாக இன்று ஆளுபவரைப் புகழ்ந்து பாடும் பாடல்) அரசவைப் பாடல் (court poetry) மற்றொரு வகை. சூழலுக்கு ஏற்பப் பாடப்படும் கவிதைகள் மற்றொரு வகை இவ்வகையில், தனிப் பாடல் திரட்டிலுள்ள பலவகையான பாடல்களைக் குறிப்பிடலாம். இயற்கை வருணனைப் பாடல் மற்றொரு வகையாகும்.
இவ்வாறு நம்மிடமுள்ள கவிதைகளை, அவற்றின் உள்ளடக்க அடிப்படையில் நாம்தான் வகை செய்ய செய்ய வேண்டும். திறனாய்வில் அடிப்படைப் பணி வகைப்படுத்துவதாகும். இந்த வகைப்பாட்டிற்குச் சரியான அடிப்படைகளைத் திறனாய்வாளர் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
தனிச் செய்யுளின் பகுப்பு
காதல் பாடல் என்பது ஒரு வகையில் பெரும் பகுப்பு, சங்ககாலப் பாடல்களிலே. காதல் பற்றிய பாடல்கள், கவிதையின் அடி வரையறைக்கேற்பப் பாகுபாடு செய்யப்பட்டுள்ளது. இப்பாடல்களைத் திணை அடிப்படை, கூற்று அடிப்படை என்றும், உரிப் பொருள் அடிப்படை என்றும் நுட்பமாகப் பகுத்துள்ளனர்.
இன்று இக்கவிதைகளைப் படிக்கும் ஒருவர். பாகுபாட்டிற்கான, காரணங்களை இவ்வாறு விளக்கலாம். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் சில காதல் பாடல்கள் உள்ளன. காதல் பாடல் என்ற வகையில் ஒன்று பட்டாலும், சங்கப் பாடல் மரபிலிருந்து இவை முற்றிலும் மாறுபடுகின்றன.
கவிதைச் சுவை, அழகியல் அனுபவம் என்பவற்றில், சங்கப் பாடல்களில் காணப்படும் கவிதை நயம் இவற்றில் இல்லை. தேவாரம், திவ்யப் பிரபந்தம் ஆகிய சமயப் பாடல்களிலும் சங்ககால அகமரபைப் (காதல் கவிதை மரபை ) பின்பற்றும் பாடல்கள் உள்ளன.
இவை சமயப் பாடல்கள். சமய அருளியல் அனுபவத்தை (Mystic experience) வெளிப்படுத்துவதற்குக் காதலும் சங்க அக மரபும் வெளியீட்டு உத்திகளாகின்றன. எனவே, இப்பாடல்களைக் காதல் பாடல் என்று வகைப்படுத்த முடியாது.
பிற்காலத்தில் தோன்றிய காப்பியம், சிற்றிலக்கியம், புராணம் ஆகியவற்றிலும் காதல் பாடல்கள் உள்ளன. ஆனால், அவற்றின் தன்மை வேறு. ஒவ்வொன்றிலும் காதல் பாடல் மரபும் போக்கும் வேறுவேறாக உள்ளன.
இன்றுவரை தோன்றியுள்ள காதல்பாடல்கள் இவ்வாறு வெவ்வேறு வகையாக அமையும். எனவே இவை அனைத்தையும் ஒரே பிரிவாகப் பகுக்க முடியாது. திறனாய்வு செய்வோர் ஒரு குறிப்பிட்ட பாடல் வகையிலே பாகுபாடு செய்வதற்கு எத்தனை வேறுபட்ட களங்கள் உள்ளன என்பதை அறிய வேண்டும்.
தனிச் செய்யுள் கவிதை என்பதில் ஒரு குறிப்பிட்ட வகையைப் பாகுபாடு செய்வதிலே எத்தனை வேறுபட்ட அடிப்படைகள் உள்ளன என்பதை இதனால் அறியலாம். தனிச் செய்யுள் - கவிதை - என்ற இலக்கிய வகை மிகப்பெரும் பரப்பை உடையது. எனவே வகைப்படுத்துதலிலும் பலவகையாக அடிப்படைகள் தேவை. திறனாய்வாளர் மிகச் சரியான முறையில் இவற்றை வகைப்படுத்த வேண்டும்.
