Tuesday, 13 January 2026

கதைகள் மூலம் வாய்மொழி இலக்கியம்

வாய்மொழி இலக்கியத்தில் மற்றொருவகை, கதைகள், தனிமனிதனுடைய உணர்வு, சிக்கல்கள் ஆகியவற்றைக் கூறும் கதைகள், குடும்ப வாழ்வை மையமிட்டவை, சமூகம் சார்ந்த கதைகள் (சான்றாக ஓர் இனம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் குடி பெயர்ந்ததைக் கூறும் கதைகள் - கி.ராஜநாராயணின் கோபல்ல கிராமம்), பாலியல் கதைகள், வீரநீர சாகசக் கதைகள், தெய்வக் கதைகள் என்று பலவகைப்படும்.

ஒரு கருத்தைக் கூறுவது இக்கதைகளின் அடிப்படை நோக்கம் நீண்ட காலமாக இக்கதைகள் வாய் மொழியாகவே வழங்கி வருகின்றன. குறிப்பிட்ட ஒருவரால் படைக்கப்படாமல், அவ்வப்போது இட்டுக் கட்டப் பட்டவை இவை.

வாய்மொழி இலக்கியத்திற்குரிய நாம் முன்னர்பார்த்த அத்தனை பண்புகளும் இதற்கும் பொருந்தும். தொடக்க காலத்தில் மனிதன் சேர்ந்து வாழும் போது, பொழுதுபோக்கவும், நீதி கூறவும் இத்தகைய கதைகளை உருவாக்கி இருப்பான். கதைகள், வாய்மொழியாக இடம்விட்டு இடம் பரவி இருக்கும்.

கதைகள், ஆய்வாளர்களால் தொகுக்கப்பட்டு நமக்குக் கிடைத்துள்ளன. இக்கதைகளை எழுத்திலக்கிய உரைநடைக் கதைகளுக்கான முன்னோடி என்று நாம் கொள்ள வேண்டும். வாய்மொழிக் கதைகளிலுள்ள உத்தி, கதை கூறும் முறை, வடிவம், உள்ளடக்கம் போன்றவை எழுத்திலக்கியக் கதைகளுக்கு முன் மாதிரியாக விளங்குபவை.

எனவே திறனாய்வில் இவற்றை ஒப்பிட்டுப் படிப்பதற்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கதை கேட்பதும் கதை சொல்லுவதும் மனிதமனத்தின் இயல்பாகும். வெளிப்படையாகச் சொல்ல முடியாத அடிமன உணர்வுகளை வெளியிடுவதற்கு வாய்மொழி இலக்கியம், குறிப்பாகக் கதைகள் ஏற்ற வடிவமாகும். எனவே, கதைகளை இந்த நோக்கில் பயன்படுத்தினர்.

கதைகளின் வகை

வாய்மொழிக் கதைகளைப் பல்வேறு வகைகளாக அவற்றின் தன்மைநோக்கிப் பகுத்துள்ளனர். சில கதைகள் அளவில் நீண்டவையாக அமையும். உரைநடை வடிவில் அமையும் கதைகள் மட்டுமே இங்கு பேசப்படுகின்றன. பாடல் வடிவில் அமைந்த கதைகள் உள்ளன.

அவை கதைப்பாடல்கள் (Ballad) என்று வழங்கப் படும். பழைய காலக் காப்பியம், புராணம், இதிகாசம் போன்றவை அவை. அவைகளிலும் கதை இருப்பினும், பாடலும் கதையும் கலந்ததால் அவை கதைப்பாடல் எனப்பட்டன. எனவே, கதைப்பாடல் தவிர்த்த ஏனைய உரை நடையில் கதைகளையே நாம் இங்குக் கவனத்தில் அமைந்த வாய்மொழிக் கொள்ளுகிறோம்.

 இக்கதைகள் பொழுதுபோக்கை மையமிட்டு இருந்தாலும் அடிப்படையில் ஒரு கருத்தைக் (நீதியை) கூறுபவை, பொதுவாக வாய்மொழிக் கதைகள் யாவும் நீதி சொல்லும் நோக்கத்தில் அமைந்தவை. அளவில் மிகக் குறுகிய சின்னஞ்சிறிய கதை முதல் நீண்ட அளவிலான கதைகள் வரை இவை பல திறத்தன.

கதை கூறும் முறையில் முன்னே இருக்கும் கதை கேட்பவர்களை மனத்தில் கொண்டு அவர்களுக்குக் கதை கூறுவது போன்ற முறையில் இவை அமைந்திருக்கும். கதையைக் கூறும் ஒருவர் கதைசொல்லி ஆகிறார். எனவே, அதற்கேற்பக்கதை கூறும் உத்திகள் கதை முழுவதிலும் காணப்படும்.

இகதைகளுக்குக் குறிப்பிட்ட இலக்கணம் கிடையாது அளவில் நீண்ட கதைகள், கதை கூறும் முறையில் கதைக்குள் கதை என்னும் உத்தியைக் கொண்டிருக்கும். இக்கதைகளில், விலங்கு, தேவைதைகள், கடவுளர், மனிதர் எனப்பலரும் கதை மாந்தர்களாக இடம் பெறுவர். எனவே கதை மாந்தர் அடிப்படையில் விலங்குக் கதை, கடவுளர்கதை என்று வகைப்படுத்தவும் கூடிய முறையில் இவை இருக்கும். கதையின் உள்ளடக்கம், கதை மாந்தர், கதையின் அமைப்பு (உருவம்) என்ற அடிப்படைகளில், இக்கதைகள் ஆய்வாளர்களால் வகைப்படுத்தப்படுகின்றன.

கதைகளின் பகுப்பு

வாய்மொழிக் கதைகள், பல்வேறு வகை சார்ந்தவை என்று மேலே பார்த்தோம். இவற்றின் அடிப்படை நோக்கம் கருத்தைக் கூறுவதும் பொழுது போக்கிற்குப் பயன்படுவதுமாகும். கதைகள் அளவில் நீண்டதாகவும், சிறியதாகவும் அமைந்துள்ளன. கதைகள் பல்வேறு விதமான உள்ளடக்கத்தைக் கொண்டவை.

எனவே உள்ளடக்கம், கதையின் அளவு என்ற அடிப்படைகளில் இவை வகைப் படுத்தப்பட்டு வருகின்றன. சில கதைகள், நேரடியாகக் கருத்தைக் கூறும்; சில குறிப்பாகக் கருத்தைக் கூறும். எனவே, கருத்துக் கூறும் முறையில் இவை பகுக்கப்படலாம்.

வாய்மொழிக்கதைகளில், மனிதர் அல்லாத விலங்குகள், பறவைகள், தேவதைகள், கடவுளர் போன்றோர் மாந்தர்களாக இடம் பெறுவர்.இவ்வகைக் கதைகளில் காட்டப்படும் வாழ்க்கையும் நிகழ்வுகளும் 95 கருத்தைக் கூறவே பயன்படுத்தப்படும்.

 வழக்கத்திற்கு மாறான இத்தகைய கதை மாந்தர்களைக் கொண்டு கதைசொல்லி ஒரு கருத்தையே கூறுகிறான். எனவே இக்கதை மாந்தர்கள் மனிதர்களுடைய வெவ்வேறு பண்புகளையே உருவகித்து நிற்கின்றனர். வாய்மொழிக் கதை மரபில் இது ஒரு வகை. சில கதைகளில் உலகம் தோன்றிய காரணம், உலக முடிவு போன்ற கற்பனைகள் இடம் பெறும்.

 இப்பகுதிகள், நம் மொழியிலுள்ள எழுத்திலக்கியமான புராணங்களிலும் உலகத் தோற்றம், உலக முடிவு என்பவைகளாக இடம் பெறும்,வாய்மொழிக் கதை மரபிலிருந்து இக்கூறுகளைப் புராண ஆசிரியர் பெற்றுள்ளனர் என அறியலாம். புராணங்கள் யாவும் சூத முனிவர் மாணவர்களுக்குக் கதை சொல்வதாகவே உள்ளன. இதுவும் வாய்மொழிக் கதை மரபு. சூதர் கதை சொல்லியின் அடையாளம். இவ்வாறு எழுத்திலக்கிய மரபுகள் வாய்மொழி இலக்கிய மரபுகளை எந்த அளவிற்கு பெற்று செழுமைப்படுத்திக் கொண்டுள்ளன என ஒப்பிட்டு அறியலாம்.

Comments


EmoticonEmoticon