Tuesday, 13 January 2026

பழமொழி, விடுகதைகள் மூலம் வாய்மொழி இலக்கியம்

வாய்மொழி இலக்கியத்தில் காணப்படும் மற்றொரு வகை பழமொழி, விடுகதை ஆகியவை ஆகும். உலக மொழிகள் எல்லாவற்றிலும் இந்த வகைகள் காணப்படுகின்றன. இவை உரைநடையில் அமைந்த வடிவங்கள். 

ஒரு கருத்தைச் சொல்லுவது இவற்றின் நோக்கமாகும். இரண்டும் மனித இனத்தின் வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையில் தோன்றிய இலக்கிய வகைகளாகும். பழமொழி பெரும்பாலும் ஒரு வாக்கியத்தில் அமையும். செறிவும், சுருக்கமும் இதன் அடிப்படைப் பண்புகள். நீதி சொல்லுவது இதன் நோக்கம்.

பழமொழி:

பழமொழி தாம் பெற்ற அனுபவத்தைக் கேட்பவருக்குச் சொல்லி, அவருக்கு வழிகாட்டுவதற்காக அமைந்த அனுபவமொழி தொல்காப்பியத்தில் மூதுரை என்ற பெயரில் இது இடம் பெறுகிறது. எனவே. அதற்கு முன்னரே வாய்மொழி மரபில் பழமொழி இடம் பெற்றிருந்தது என அறியலாம்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பழமொழி என்ற பெயரிலே ஒரு நூல் உள்ளது. ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருக்கும். மேலும் அநேகமாக எழுத்திலக்கியங்கள் அனைத்திலும் பழமொழி இடையிடையே காணப்படுகிறது.

 (கேட்பவருக்கு நீதி சொல்லுவது இதன் அடிப்படை நோக்கம் என்று முன்னர்ப் பார்த்தோம். பிற்காலத்தில் ஒளவையார், பாரதியார் போன்றோர் பாடிய ஆத்திசூடி இதன் மற்றொரு வடிவம் என்று கூறலாம்.

விடுகதை: புதிர்

விடுகதை ஒரு கேள்வியை எழுப்பி அதற்குப் பதில் சொல்லுவது போல அமைந்திருக்கும். ஒருவகையில் இது உரையாடல், வினாவிடை என்றும் இதைக் கூறலாம். புதிர் என்றும் அழிப்பான் கதை என்றும் இது கூறப்படுகிறது. வாழ்க்கையில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் ஒரு கருத்தைக் கூறுவது இதன் நோக்கமாகும். பழமொழி போல நேரடியாக ஒரு தொடராக அமையாமல், கேள்வியும் பதிலுமாக இது இருக்கும். கேள்வி வடிவில் விடுவிக்க முடியாதபடி முதல் பகுதி அமைந்திருக்கும். அதைக் கேள்வி கேட்பவர் எழுப்புவார். இதற்கு விடுகதை போடுதல் என்று பெயர்.

 எதிரிலிருப்பவர் இந்தக் கேள்வியை நன்கு யோசித்துப் பதில் கூற வேண்டும். தெரியாவிட்டால், கேள்வி கேட்பவரே பதில் கூறி எதிராளியை வியப்பில் ஆழ்த்துவார். ஒருவகையில் மனிதனின் அறிவுக் கூர்மையைச் சோதிப்பதற்காக விடுகதை போடப்படுகிறது என்று கொள்ளலாம். கிராமப்புறங்களில் பொழுது போக்கை மையமிட்டு இது உருவாகி இருக்கும். விடை கூற முடியாத வினாவை எழுப்பி, கேட்பவரைச் சிந்திக்கவைத்து, விடை கூறச் செய்வது இதன் நோக்கமாகும்.

பழமொழி, விடுகதைகளின் வகைகள்

பழமொழி, விடுகதை இரண்டும் வாய்மொழி இலக்கிய வகைகள், எனவே வாய்மொழி இலக்கிய மரபிற்கேற்ப, வட்டாரப் பண்பிற்கும், சாதி வேறுபாடுகளுக்கும் ஏற்ப இவை அமையும், எனவே இவைகளைத் தொகுத்து ஆராய்பவர்கள், வட்டாரம், சாதி அடிப்படையில் இவற்றை வகைசெய்தனர். அதற்கடுத்த நிலையில் தொழில், சமயம், கலை, பழக்க வழக்கங்கள் என்ற பல்வேறு அடிப்படைகளில் இவற்றை வகைப்படுத்தினர்.

கனஆய்வு செய்து பழமொழி, விடுகதைகளைத் திரட்டிய ஆய்வாளர்கள் தங்களுடைய தேவைக்கும் நோக்கத்திற்கும் ஏற்ப இவற்றை வகைப்படுத்தினர். பழமொழி விடுகதை இரண்டும் கேட்பவரை மையமிட்டு அமைந்தவை. எனவே அதற்கேற்ற மொழிக் கூறுகளை உரையாடல் பண்புகளைக் கொண்டிருக்கும். எனவே இந்த அடிப்படையிலும் வகைப்படுத்தலாம்.

பெரும்பாலும் பேச்சு வழக்கு மொழியை அடிப்படையாகக் கொண்டு இவை அமையும். அதனாலே சாதி,வட்டாரக் கிளைமொழிப் பண்புகள் இவற்றில் காணப்படும். எனவே எழுத்திலக்கிய மரபில் காணப்படும் செவ்வியல் மரபுகளை, மொழி உட்பட எதையும் காண முடியாது. வாய்மொழி இலக்கியத்திலிருந்துதான் புலவர்களால் செவ்வியல் இலக்கிய மரபுகள் உருவாக்கப்பட்டன; இலக்கண விதிகள் ஏற்படுத்தப்பட்டன என்பதை நாம் மறக்கக் கூடாது.

வினாவிடை அமைப்பில் காணப்படும் விடுகதை, ஒரு தொடராக அமையும் பழமொழி இரண்டும் கருத்தை அடிப்படையாகக் கொண்டவை. எனவே சொல்லப்படும் கருத்தின் அளவிற்கேற்ப வடிவம் அமையும். சிறியதாகவோ நீண்டதாகவோ அமைந்திருக்கும் பழமொழி, விடுகதைகளை அளவின் அடிப்படையில் வகை செய்ய முடியாது. கருத்தும் சொல்லுபவன் மனோதர்மமும் மட்டுமே அளவை முடிவு செய்யும்.

அதில்தான் இவற்றின் படைப்பாற்றல் உள்ளது. ஒரே பழமொழி, விடுகதை, சாதிக்கேற்ப அல்லது வட்டாரத்திற்கேற்ப மாறுபடும். இந்த மாறுபாடு ஒருசில சொற்களில் அமைந்திருக்கும். எனவே வகைப் படுத்துவோர் இந்த நுட்பத்தை மனங்கொண்டு பகுக்க வேண்டும். பொதுவாக வாய்மொழி இலக்கியங்களைப் பாகுபாடு செய்யும்போது தம்முடைய நோக்கத்திற்கேற்ப, பாகுபாட்டின் அடிப்படைகளை ஒரே சீராக வைத்துக் கொள்ள வேண்டும். இதை மட்டும் கவனத்தில் கொண்டால் போதுமானது.

பழமொழி, விடுகதைகளின் அடிப்படை

பழமொழி, விடுகதை இரண்டும் உரைநடையில் அமைந்தவை என்று மேலே கண்டோம். பழமொழி கருத்தைக் கூறுவதை முதன்மையாகக் கொண்டது: தொடராக, வாக்கியமாக அமையும். எனவே கருத்தை முதன்மையாகக் கொண்டு.

அதற்கேற்பச் சொற்களைப் பயன்படுத்தும் ஓர் இலக்கிய வகை அது. கேட்பவனுக்குக் கருத்து மனதில் பதியுமாறு வெளிப்படையாகச் சொல்லுவது இதன் அடிப்படையாகும். அதனால், குறிப்பாக மறைத்துக் கூறும் உத்திகள் இதில் இடம் பெறா. நேரடியாக முகத்தில் அறைந்தால் போல், கருத்தை வெளிப்படுத்துவது இதன் பண்பாகும்.

பொழுது போக்கிற்குரிய இலக்கியக் கூறுகள், பழமொழியில் இடம் பெறா. பிற்காலத்தில் பழமொழி நானூறு என்று செவ்வியல் இலக்கியமாக எழுதப் பட்டபோது, அதில் கற்பனை, அணிநலம். உவமை போன்ற இலக்கியக் கூறுகள் இடம் பெற்றன. வாய்மொழி மரபிலிருந்து வளர்ந்த புலமைக் கூறுகள் இவை விடுகதை, வினாவும் விடையுமாக அமையும்.

வினாவிற்குரிய பகுதி நீண்டதாக அமையும். விடை மிகச் சுருக்கமாக அமையும். கருத்து கூறுவது அடிப்படை என்றாலும் அதை வெளிப்படையாக இல்லாமல் மறைத்துக் கூறுவது விடுகதை. விடுகதை போடுபவரின் அறிவுத்திறனைக் காட்டுவதற்காகவும், கேட்பவர் அவ்வளவு சுலபமாக எளிதில் விடை காண முடியாதபடி சிக்கலானதாகவே வினா இதில் அமையும்.

விடுகதை போடுபவரின் புத்திக் கூர்மையைக் காட்டுவதும் விடுகதையில் உள்ள புதிரை விடுவித்து விடை கூற முடியாமல் எதிராளி திணறுவதுமாக அமைப்பது விடுகதையின் சிறப்பாகும்.

பிற்காலத்தில் எழுத்திலக்கியத்தில் வினா-விடையாக அமையும் அம்மானை, சாழல் போன்ற இலக்கியவகைகள்,இதிலிருந்து உருவானவை. வினா-விடைப் பண்பே இவற்றில் முதன்மையாக அமைந்தது. சிலப்பதிகாரத்தில் அம்மானை இடம் பெற்றது. திருவாசகத்தில் சாழல் இடம் பெற்றது. இவ்வாறு நாட்டுப் புற இலக்கிய வகைகள் செவ்வியல் (எழுத்து) இலக்கியம் தோன்ற முன் மாதிரியாக அமைந்தன.


Comments


EmoticonEmoticon