ஒரு செய்தியாளர் தமது பணியைச் செய்கின்றபொழுது என்னென்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று எழுதப்பட்ட சட்டம், வரையறுத்த விதிகள் எவையும் இல்லை. நடைமுறையில் மூத்த செய்தியாளர்கள் அறிவுரையாகப் பின்பற்றர் சொல்கின்ற சில அடிப்படை விதிகள் (Ground Rules) உள்ளன. அவற்றை இந்தப் பகுதியில் காண்போம்.
வாய்மையை நாடுக
செய்தியாளர் எப்பொழுதும் உண்மையானவற்றையே நாடித் தேடிக் கண்டு செய்தியாக்க வேண்டும். ஆதாரமற்ற செய்திகளை நம்பக் கூடாது. தீர விசாரித்து அறிந்த மெய்களையே செய்தியாக்க வேண்டும். மேற்போக்காகப் பார்க்கின்றவற்றைச் செய்தியாக்கினால் தொல்லைகள் தான் ஏற்படும்.
கேட்கக் கேட்க கிடைக்கும் செய்தி:
செய்தியாளர் எவ்வளவுக்கு எவ்வளவு தொடர்புள்ள கேள்விகளைக் கேட்கின்றாரோ அவ்வளவுக்குச் செய்தி விவரமாகக் கிடைக்கும். கேள்வி கேட்கத் தயங்கவோ, வெட்கப்படவோ கூடாது. செய்றியை இளங்கண்டு, செய்தி தருபவரைத் தேடியடைந்து, கேள்விகளை முறையாகத் தொடுத்து விடைகளைப் பெறவேண்டும். பொறுமையாக முயன்றால் அருமையான செய்திகள் கிடைக்கும்.
சரிபார்த்து உறுதிப்படுத்துக:
செய்திகளை நாளிதழின் அலுவலகத்திற்கு அனுப்புவதற்கு முன்னால் சரி தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, குழப்பமான சூழ்நிலைகளில் உறுதிப்படுத்தாத செய்திகளை நம்பக் கூடாது. எடுத்துக் காட்டாக, ஓர் அரசியல் கட்சி பிளவுபடுகின்ற பொழுது, சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு அணிகளாகப் பிரியலாம். யார், எந்த அணி என்பதை ஒரு முறைக்கு இருமுறை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அத்தகைய சூழலில் இரு தலைவர்களும் சொல்லுகின்ற செய்திகள் முழு உண்மைகளாக இருக்காது. எனவே தீர விசாரிக்க வேண்டும்.
நடுநிலை :
செய்தியை உள்ளது உள்ளபடி கூட்டியோ குறைக்காமலோ சொல்ல வேண்டும். நடுநிலை நின்று செய்திகளைத் தர வேண்டும்.
அச்சம் அகற்றுக: இருக்க வேண்டும். அச்சுறுத்தலுக்குப் பயந்து உண்மையைப் புதைத்துவிடக் கூடாது. புலனாய்வு வகையில் செய்திகளைச் சேகரிக்கின்றபொழுது. மிகவும் துணிச்சலாகச் செயல்பட வேண்டியதிருக்கும்.
அறிந்துகொள்ள ஆர்வம் வேண்டும்:
செய்தியாளரிடம் புதியனவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும். இந்த ஆர்வம் இருந்தால் தான் மோப்பம் பிடித்துச் செய்திகளை அறிந்துகொள்ள இயலும்.
பயிற்சி :
பள்ளியிலோ, கல்லூரியிலோ பெற்ற பொதுக்கல்வியை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவர் செய்தியாளராகத் திறம்படச் செயலாற்ற முடியாது. இப்பொழுது கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் இதழியல் (Jounalism) பாடத்தைக் கற்றுத் தருகின்றனர். இப்பாடத்தைக் கற்றவர்களுக்கு ஆதார அறிவு இருக்கும்.
செய்தியாளருக்கு உண்மையான பயிற்சி செய்தித்தாளில் பணியாற்றும் பொழுதுதான் கிடைக்கின்றது. "இப்படித்தான் செய்தி கிடைக்கும்; இப்படித்தான் செய்தியை எழுத வேண்டும்" என்று அறுதியிட்டு உறுதியாகக் கூற முடியாது. ஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு முறையில் கிடைக்கும். சூழ்நிலைக்கேற்பச் செய்தியாளர் அறிவுக் கூர்மையோடு செயல்பட வேண்டும். பெரிய செய்தித்தாள்களில் முதிய செய்தியாளர்களைப் பார்த்தும், கேட்டும் செய்தி திரட்டும் முறைகளை அறிந்து கொள்ளலாம். ஒரு வகையில் இதைத் தனக்குத்தானே தரும் பயிற்சியாக அமைத்துக் கொள்ள வேண்டும். ஆர்வமும் முயற்சியும் மிகவும் வேண்டும்.
பெரும்பாலும் செய்தியாளர்கள் இளைஞர்களாகவே இருக்கின்றனர். யாரும் தொடர்ந்து செய்தியாளராக இருப்பதில்லை. ஒருவர் இதழாளராகப் (Joumalist) பல பணிகளை மேற்கொள்வதற்குச் செய்தியாளராகப் பணியாற்றுவது பயிற்சிக்களமாக அமைகின்றது.
