எந்தத் தொழிலையும் திறமையாகச் செய்ய வேண்டுமானால் அதற்குச் சில அடிப்படைகள் தேவை. அதேபோல ஒரு செய்தியாளர் நல்ல ஆற்றலுடன் பணிசெய்ய அவர் தேவையான தகுதிகளை வைத்திருக்க வேண்டும். அவற்றை அறிவார்ந்த முறையில் பயன்படுத்த வேண்டும். செய்தியாளரின் அடிப்படைத் தேவைகளை இங்கே
மொழியறிவு:
செய்தியாளர் தேவையான அளவிற்குக் கல்வியும் மொழியறிவும் பெற்றிருக்க வேண்டும். சொற்கள்தான் அவர்களது கண்ணுக்குத் தெரியாத கருவிகள். எதனை எப்படிக் கூற வேண்டுமோ அதனை அப்படியே கூறச்சொற்கள் துணை செய்கின்றன. செய்தியாளருக்கு மொழிவளம் வேண்டும். செய்திகளை எழுதும்பொழுது தக்க சொற்களைத் தேடிக் கொண்டிருக்கக் கூடாது. செய்திகளைப் படிப்பவர்கள் கண்ணுக்கு முன்னால் செய்திகள் நிகழ வேண்டும். வண்ணங்களில் ஓவியர்கள் காட்சிகளைத் தீட்டிக் காட்டுவதுபோல, செய்தியாளர்கள் செய்திகளைச் சொல்லோவியமாக வரைந்து காட்டும் திறன் பெறவேண்டும்.
செய்தியாளர்களுக்கு எவ்வளவு மொழிகள் தெரியுமோ அவ்வளவுக்கு அவர்கள் சிறப்பாய்ப் பணி செய்ய முடியும். இந்தியா போன்ற நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பது செய்தியாளர்களுக்குத் தேவை என்று கூறலாம்.
தட்டெழுத்துப் பயிற்சி :
செய்தியாளர் தட்டச்சு அல்லது கணினி அச்சு செய்வதற்குக் கற்றுக் கொண்டிருப்பது நல்லது. செய்திகளைக் கையால் எழுதிக்கொடுப்பதைவிட, தட்டச்சடித்து அல்லது கணினி அச்சு செய்து கொடுப்பது தெளிவாக இருக்கும். செய்திக் குறிப்புகளை வைத்துக் கொண்டு நேரடியாகத் தட்டச்சு செய்யப்பழகிவிட்டால் விரைந்து செய்திகளை வரைந்து அனுப்ப முடியும் தற்காலத்தில் அல்லது கணினி அச்சுச் கணினி அறிவு இருந்தால் கணினி வாயிலாகவே தட்டச்சுச் செய்து அனுப்பிவிட இயலும்.
சுருக்கெழுத்துப் பயிற்சி :
நட்டெழுத்து மற்றும் கணினிப் பயிற்சியைப் போன்றே சுருக்கெழுத்துப் (Shorhand) பயிற்சியும் செய்தியாளருக்குத் தேவை. குறிப்பாக சொற்பொழிவுகளைக் கவனிக்கும் பொழுதும், பேட்டி நடத்தும்பொழுதும் சுருக்கெழுத்து மிகவும் துணையாக இருக்கும்.
குறிப்பேடு, பேனா, பென்சில்கள்:
செய்தியாளர் எப்பொழுதும் கையில் குறிப்பேடும் பேனாவும் இரண்டு மூன்று சீவிய பென்சில்களும் வைத்திருக்க வேண்டும். எங்கு எப்பொழுது செய்திகள் கிடைக்குமோ, அங்கு அப்பொழுதே உடனுக்குடன் எழுதிவிட வேண்டும். நினைவாற்றலை முழுக்க நம்பக் கூடாது. ஆதாரக் குறிப்புகளைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். வாய்ப்பு இருந்தால் பதிவு செய்யும் கருவிகளையும் (வீடியோ அல்லது ஆடியோ) வைத்துக் கொள்ளலாம்.
தகவல் கோப்பு:
செய்தியாளர் தமக்கு வேண்டிய விவரங்களை எல்லாம் உள்ளடக்கிய ஒரு கோப்பினை (File) உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதில் தொடர்பு கொள்ள வேண்டியவர்களின் முகவரிகள், தொலைபேசி எண்கள் ஆகியவற்றைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவையானபொழுது தக்கவர்களோடு தொடர்பு கொண்டு செய்திகளைச் சேகரிக்க இத்தகைய தகவல் கோப்பு உற்ற துணையாக இருக்கும்.
எதிர்கால நாட்குறிப்பு:
செய்தியாளர் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளைக் குறித்துக் கொள்ள 'எதிர்கால நாட்குறிப்பு, (Forward Diary) ஒன்று வைத்துக் கொள்ள வேண்டும். அதில் அமைச்சர்களின் வருகை, கட்சி மாநாடுகள், சட்டமன்றக் கூட்டத் தேதிகள் போன்றவற்றை அறிவித்தவுடன் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அவற்றைப் பார்த்து உரிய காலத்தில் செயல்படலாம்.
