Sunday, 11 January 2026

சிறுகதை என்றால் என்ன? அவற்றின் வகைகள்?

சிறுகதை என்ற சொல்லே, அளவில் சிறியதான கதை என்று பொருள் விளக்கம் தரும். ஒரு கருத்து,ஓர் உணர்ச்சி, ஒரு செயல் என்று ஏதேனும் ஒன்றை மையமாக வைத்து உரைநடையில் எழுதப்படுவது சிறுகதை, சிறுகதையில் மையம் ஒன்றாக மட்டுமே இருக்கும்.

 மிகக் குறைந்த நேரத்தில் படித்து முடிக்கக் கூடியதாக அது இருக்கும். அந்த அளவிற்குள் வாசகனை ஆழமாக அது பாதித்துவிடும். எனவே, சொற்சுருக்கம், நுட்பமான பொருள் விளக்கம் கொண்டதாகச் சிறுகதை அமையும். அதன் அளவு சிறியது.

நாவலின் சுருக்கம் சிறுகதையன்று. சிறுகதை, குறுநாவலின் சுருக்கமும் அன்று. தன்னளவில் முழுமை பெற்ற ஒரு தனித்த இலக்கியவகை அது. சிறுகதையில் இடம் பெறும் செயல், ஏற்படுத்தும் உணர்வு, காலம், இடம் என்பவை ஒருமைப்பாட்டுடன் அமையும்.

கதையின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை எந்தவிதமான விலகலுமின்றி ஒரே மையத்தைக் குறிவைத்துப் புனையப்படும். சிறுகதையின் தலைப்பு, தொடக்கம், முடிவு என்பவை மிகுந்த விறுவிறுப்புடன் குதிரைப்பந்தயம் போல அமையும் என்று கூறுவர். படிக்கும் வாசகருக்குச் சிறுகதை அதன் கருத்தை முழுமையாக வெளிப்படுத்துமாறு அமையும்.

சிறுகதை அமெரிக்காவில் ஆங்கில மொழியில் முதன் முதலில் தோன்றியது. தமிழில் பாரதியாரிடமிருந்து சிறுகதை தோன்றியது. பின்னர் அ.மாதவையா, .வே.சு.ஐயர், புதுமைப்பித்தன், கு.ப.ரா., என்று சிறுகதை மரபு தொடர்ந்தது. வடிவச் செம்மை, சொற்சுருக்கம். ஆழமான கருத்து, நல்ல மொழி நடை, அழுத்தமான தமான உரையாடல், நேர்த்தியான உருவம், சிறந்த கதைமாந்தர் படைப்பு என்பவைகளைக் கொண்டு சிறுகதை அமையும்.

சிறுகதைக்கு இதுதான் இலக்கணம் என்று வரையறுத்துக் கூற முடியாது. நல்ல சிறுகதைகளே இலக்கணமாகவும், முன் மாதிரியாகவும் அமையும். சிறுகதை இலக்கியத்தைத் திறனாய்வு செய்யவும் சிறுகதை படைக்கும் படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ளவும், அது பற்றி அறிவது தேவையாகிறது.

சிறுகதையின் கூறுகள்

நாவலின் கூறுகள் என்று நாம் மேலே பார்த்த கூறுகள் அப்படியே சிறுகதைக்கு முரியவை. முழுமையும் எல்லாக் கதைகளிலும் அமையவேண்டும் என்பதில்லை. சிறுகதை முழுமையாக ஒருமைப்பாடும். கட்டுக்கோப்பும் செறிவும் உடையதாக இருக்கவேண்டும்.

அது மிகச் சிறிய அளவை உடையது. அதன் மொழி, கூறுவது குறைவாகவும் வாசகன் உய்த்துணருமாறு செய்வது மிகுதியாகவும் உடையதாக அமையும். இந்த வகைகளில் சிறுகதை நாவலிலிருந்து வேறுபட்டு அமையும்.

சிறுகதைக்குரிய கரு எதுவாகவும் அமையலாம். படிப்பவர் ஆர்வத்தைத் தூண்டுமாறு, புதிய அனுபவம் தருமாறு அமையவேண்டும். அதன் கதைப்பின்னல் மையத்தை விட்டு விலகாமல் மிகச் செறிவாக அமைய வேண்டும். ஒருமைப்பாடு சிதையாமல், நிகழ்ச்சிகள் ஒன்றையடுத்து மற்றொன்று அமைய வேண்டும். அதற்கேற்ற பின்னணியாகக் காலம், இடம் அமைய வேண்டும். செயல்,காலம், இடம் ஆகிய மூன்றும் ஒருமைப்பாட்டுடன் அமைய வேண்டும்.

சிறுகதையில் கதையாசிரியர் விளக்க நினைக்கும் கருத்தை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற அளவு தேவையான கதைமாந்தர்கள் இடம் பெறுவர். நாவலைப்போல அவர்களுடைய பண்பு விளக்கம், ஆளுமைத் திறன், வாழ்க்கை அனுபவம் என்பவை பரந்த அளவில் இடம் பெறுவதற்குச் சிறுகதையில் வாய்ப்பில்லை.

 சிறுகதை, மின்னலடிக்கும் கணநேரத்தில் வாழ்க்கையை காட்டக்கூடியது. ஆனால் அதைக் கொண்டு படிக்கும் வாசகர் நிறைய உய்த்துணர வேண்டும். எனவே அந்த அளவிற்கு மட்டுமே கதை மாந்தர் படைப்பு சிறுகதையில் இடம் பெறும். மனிதனைக்

சிறுகதையில் கருப்பொருளிற்கு ஏற்ற உத்திகளை ஆசிரியர் பயன்படுத்துவார். ஆசிரியரே கதை கூறுதல், கதை மாந்தர் கதை கூறுதல், கடிதம், நாட்குறிப்பு கதை கூறுதல் என்ற ஏற்றவொரு நோக்குநிலையை ஆசிரியர் கையாளுவார். கதையின் தலைப்பு மிகநுட்பமாக அமைய வேண்டும். அது நேரடியாகவும் (சான்று: கடவுளும் கந்தசாமி பிள்ளையும், விடியுமா?) மறைமுகமாகவும் (சான்று: நிகும்பலை, சாபவிமோசனம், அக்னிப்பிரவேசம்) அமையலாம்.

முதல்வரி, இறுதினரி என்பவை மிகநுட்பமாக ஆர்வத்தைத் தூண்டுமாறு அமைய வேண்டும். சிறுகதையின் முடிவு வரி கதை முடிந்தது என்பதைக் கூறாமல் முடிவிலிருந்துதான் படிப்பவர்சிந்தளை தொடங்குகிறது என்பதைக் கூறுவதாக அமையவேண்டும்.

சிறுகதையின் உரையாடல் இவ்வாறே நுட்பமாகவும், ஆணித்தரமாகவும் ஆசிரியர், வாசகரிடம் ஏற்படுத்த வேண்டிய விளைவைச் சரியாகச் சொல்வதாகவும் அமையவேண்டும். இவை சிறுகதையில் அடிப் படையான கூறுகள். இவை மட்டுமே கூறுகள் என்று எண்ணக் கூடாது. சிறுகதைகளைத் தேடிப் படிக்கப் படிக்கத்தான் அந்தக்கலை நமக்கு விளங்கும்.

சிறுகதையின் வகைகள்

சிறுகதையும் நாவலைப் போன்று பல வகைகளை உடையது: சமூகச் சிறுகதை. வாலாற்றுச் சிறுகதை என்பவை அடிப்படையான வகைகளாகும். இப்போது வரலாற்றுச் சிறுகதை எழுதுவோர் குறைவு. அது போலத் தமிழ்ச் சிறுகதையின் தொடக்க காலத்தில் புராண, இதிகாச, இலக்கிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு சமகால வாழ்க்கைப் பிரச்சினையை அதன் வழியே கருவாக்கிச் சிறுகதை படைத்தனர். 

இப்போது அதுவும் குறைவாக உள்ளது. தனிமனிதச் சிக்கல், உணர்வுப் போராட்டம், குடும்ப, சமூகப் பிரச்சினைகள் என்பவை இன்று அதிகமாகச் சிறுகதைக்குரிய களங்களாக உள்ளன. எனவே, இவை பெரும்பாலான வகை.

வட்டாரப் பண்பை மிகுதியாகக் கொண்ட சிறுகதைகள் உள்ளன. இவை ஒரு வகை. குறிப்பிட்ட வட்டார மக்களுடைய வாழ்க்கைப் பிரச்சினை, பண்பாட்டுச் சூழல் என்பவை அவர்களுடைய மொழியிலே படைக்கப்படுவது இதன் சிறப்பாகும்.

ஒவ்வொரு வட்டாரத்திற்கும், இனத்திற்கும், தனித்தன்மை வாய்ந்த பிரச்சினைகள் இருக்கும். அவற்றை மிகச் சரியாக வெளிப்படுத்துவது வட்டாரச் சிறுகதையாகும். கதை கூறும் உத்தி முறையை அடிப்படையாகக் கொண்டு நனவோடைச் சிறுகதை என்பது வகைப்படுத்தப்படுகிறது. உள்ளடக்கத்தை மையமாகக் கொண்டு பெண்ணியச் சிறுகதை, தலித்தியச் சிறுகதை என்பவை மிகுதியாக வெளிவருகின்றன.

ஐரோப்பிய மொழி இலக்கியங்களைப் பயின்றவர்கள் அதே முறையில் புதிய சோதனை முயற்சிக் கதைகளை இப்போது எழுதுகின்றனர். பின் அமைப்பியல், பின் நவீனத்துவம், நவீனத்துவம், நேர்கோடற்ற எழுத்து, மாந்திரிக யதார்த்த வாதம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இக்கதைகள் எழுதப்படுகின்றன.

இவை அனைவருக்கும் புரியாத மொழியில் அமைவதால் ஒரு சிலருக்கே உரியதாகிறது. சிறுகதை இலக்கியத்திறனாய்வை அறிந்து படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ள இந்த வரலாற்று அறிவு தேவை.

Comments


EmoticonEmoticon