ஒரு கதையைக் கவிதையில் கூறுவது காப்பியம்) அளவில் நீண்டதாகப் பல்வேறு கிளைக்கதைகளைத் தன்னுள் கொண்டதாக அது அமையும். ஒரு மையக் கருத்தைக் கூறும் நோக்கில் கதை பின்னப்படும். வரலாறு, சமயம், வாய்மொழி மரபு போன்றவற்றிலிருந்து பெற்ற கதையை விரிவாகக்கவிதையில் பாடுவது காப்பியம். பிற மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டதாகவோ, தமிழிலிருந்து உருப்பெற்றதாகவோகாப்பியம் அமையும்.
கவி செய்வது காவியம் என்று வடமொழியில் இச்சொல் விளக்கப்படுகிறது. தமிழில் காப்பியம் என்பது பழைய சொல். தொடக்கத்தில், தொடர்நிலைச் செய்யுள் என்ற பெயரில் காப்பியம் வழங்கி வந்துள்ளது.
கவிதையில் அமைந்த கதையும், அடிப்படைக்கருத்தும் தொடர்புடைய ஓர் இலக்கிய வகை, காப்பியம் என்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். காப்பியத்தின் மையக் கருத்தைப் பாவிகம் என்று கூறினர். கதை நெடுகிலும் பரவி நிற்பது என்பது இதன் பொருள். காப்பியங்கள் தமிழில் சிலப்பதிகாரம் முதல் இன்று வரை ஏராளமான தோன்றியுள்ளன.
அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களைக் கூறுவது காப்பியத்தின் பாவிகம் என்று இலக்கணம் வகுத்தனர். 'அறம் வெல்லும்; பாவம் தோற்கும்' என்னும் கருத்தை மையமிட்டுச் சில காப்பியங்கள் தோன்றின. புராணம் என்ற பெயரில் பின்னர்த் தோன்றிய இலக்கிய வகையும் காப்பியமாகவே கொள்ளப்பட்டது. இலக்கணமாபுப்படி அமைந்த கவிதையால் படைக்கப்பட்டது. பல்வேறு வகையான கவிதைகளைக் கொண்டு காப்பியம் அமைந்தது.
காப்பியத்தின் வகைகள்
காப்பியம், அதன் அளவு, கதைப் பொருள், கதையின் தன்மை என்ற பல்வேறு அடிப்படைகளில் வகைப்படுத்தப்பட்டது. வாய்மொழி இலக்கிய மரபிலுள்ள கதைப்பாடல், வாய்மொழிக் காப்பியம் என்பவற்றிலிருந்து மாறுபட்டது. செவ்வியல் இலக்கியக் காப்பியம். சில காப்பியங்கள், இதிகாசமென்று (இதிகாசம் -நடந்த கதை) அழைக்கப்பட்டன. வடமொழி மரபில் இராமாயணம், மகாபாரதம் என்பவையும், தமிழில் சிலப்பதிகாரம், பெரிய புராணம் என்பவையும் இதிகாசம் ஆகும்.புராணம் என்ற பெயருடன் காப்பியம் அமைந்தது.
வடமொழி இலக்கண மரபைப் பின்பற்றி, அளவின் அடிப்படையிலும் உறுதிப் பொருள் கூறும் தன்மையிலும், பெருங்காப்பியம், சிறு காப்பியம் என்று வகைப்படுத்தப்பட்டது. சமயக்கருத்துக்களைக் கூறும் காப்பியம், சமயக் காப்பியம் எனப்பட்டது. இது உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாகும். வரலாறு, சமூகம் என்று கதை அடிப்படையில் காப்பியங்கள் பகுக்கப்பட்டன.
மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை,நேரடியாகத் தமிழிலே தோன்றியவை என்று கதை மூலத்தைக் கொண்டு சில காப்பியங்கள் வகைப்படுத்தப்பட்டன. இந்த வகைப்பாடுகள் அவ்வக்காலத்தில் திறனாய்வாளர்களால் செய்யப் பட்டவை. இதற்கு அடிப்படையான ஒரே தன்மைத்தான காரணம் பின்பற்றப் படவில்லை. மாறாகத் திறனாய்வாளர்கள் தத்தம் நோக்கங்களுக்கேற்ப வகைப்படுத்தினர்.
கவிதை, தனிச் செய்யுள் என்ற நிலையிலிருந்து நீண்ட ஒரு கதையைக் கூறுவதற்குப் பயன்படுமாறு அமைந்தது. படிப்பவருக்குக் கவிதையைச் சுவைப்பதில் சோர்வு ஏற்படாமல் இருக்கவும், கவிதையின் அழகுணர்ச்சி, கதைச் சூழல், உணர்ச்சி, கருத்துக்கூறும் முறை ஆகியவைகளுக்கேற்ப, ஓசை நயமும் சொல் வளமும் பொருள் ஆழமும் உணர்ச்சி வெளிப்பாடும் கொண்ட கவிதைகளால் காப்பியம் படைக்கப்பட்டது. தமிழில் இதற்கு மிகச் சிறந்த சான்று கம்ப ராமாயணம்.
காப்பியத்தின் பகுப்பு
காப்பியத்தின் உள்ளடக்கம், கதை நிகழும் சூழல், மாந்தர் மன உணர்வு. சொல்லப்பட வேண்டிய கருத்து என்பவைகளோடு, வாசகரிடம் ஏற்படுத்த வேண்டிய விளைவையும் மனத்திற் கொண்டு காப்பியக்கவிஞன் தக்க கவிதைகளை உருவாக்குகிறான்.
ஒரே வகையான யாப்பில் அமைந்த கவிதையாயினும், பல்வேறு வகைக் கவிதைகளாயினும் கவிஞன் அவற்றை மிகச் சரியாகப் பயன்படுத்துகிறான். காப்பியம், எண்ணற்ற தனிச் செய்யுள்களைக் கொண்டது என்பதை நாம் மறக்கக் கூடாது.
சில காப்பியங்களில் வாய்மொழி இலக்கிய மரபிலிருந்து பெற்ற கவிதை வகைகளைக் கவிஞர் பயன்படுத்துவார். எழுத்திலக்கிய மரபிற்கேற்ப அக்கவிதை வடிவம் மாறும். சான்றாகச் சிலப்பதிகாரத்தில் வரிப்பாட்டு (கானல் வரி, வேட்டுவ வரி), குரவைப்பாடல் (குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை) போன்ற வாய்மொழிக் கவிதை வகைகளை இளங்கோ பயன்படுத்தியுள்ளார். காப்பியப் போக்கில் இவை மிகச் சிறந்த விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.
மாறாகப் பெரிய புராணம், வில்லி பாரதம், கம்பராமாயணம் போன்ற காப்பியங்களில் ஒரே வகையான யாப்பில் அமைந்த பாடல்களைக் காண்கிறோம். அவைகளின் ஓசை நயமும் சொற்கட்டும், உணர்ச்சி வேகமும் மிகச் சிறந்த பயனைத் தந்துள்ளன. பாஞ்சாலி சபதத்தில் பாரதியார் இவ்விரு மரபுகளையும் போற்றியுள்ளார்.
வாய்மொழிக் கவிதை மரபும் இலக்கணத்தில் அமைந்த செவ்வியல் கவிதை மரபும் ஒன்றிணைந்து படிப்பவரிடம் பாரதி எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்துகின்றன. எனவே கவிதை, அதைப் படைத்து, மிகச் சரியான முறையில் கையாளும் கவிஞனின் ஆற்றலுக்கேற்ப சிறப்படைகிறது.
