Monday, 12 January 2026

இலக்கிய வகையில் இந்நாட்டவர் கருத்து

தமிழ் மரபில் இலக்கண நூலார், உரையாசிரியர்கள், திறனாய்வாளர்கள் ஆகியோர் வகை குறித்து விளக்கியுள்ளனர். இலக்கிய வகை என்பதற்கு இதுதான் இலக்கிய வரையறுத்த விளக்கம் என்று கூறவில்லை. ஆனால் கிடைத்துள்ள இலக்கியங்களை வகைகளாகப் பாகுபாடு செய்துள்ளனர்.

 முன்னர்க் கூறியபடி. தொல்காப்பியர் காலத்தில் இலக்கியம் என்ற சொல் வழக்கில் இல்லை. பாட்டு, செய்யுள், நூல் போன்ற சொற்கள் தொல்காப்பியரால் கூறப்படுகின்றன. எனவே, நம் மரபிலும் பாட்டுதான் (செய்யுள், கவிதை) பழைமையான இலக்கிய வகை என்று அறியலாம்.

 நீண்ட காலத்திற்குக் கவிதைதான் இலக்கிய வகையாகப் பலவற்றையும் வெளிப்படுத்துவதற்கு ஏற்றதாக இருந்து வந்துள்ளது. உரைநடை மிகப் பிற்காலத்திலே நடைமுறைக்கு வந்துள்ளது.

கருத்தைச் சொல்லுவது தான் நூலின் முதற்பணி, என்று கருதினர். இது எல்லாக் காலத்திலும் காணப்பட்டிருக்கிறது. எனவே இலக்கிய வகையின் அடிப்படை உள்ளடக்கம் என்று நம் நாட்டார் கருதினர். கருத்தை அழகாகவும், சுவையாகவும் கூறவே உருவம், உத்தி போன்றவை துணை செய்துள்ளன. இலக்கண நூலார். உரையாசிரியர்கள் தமக்குக் கிடைத்த இலக்கிய வகைகளை ஒத்த சில அடிப்படைகளில் வகைகளாகப் பகுத்துள்ளனர். இந்த வகைப்பாட்டிற்கு அடிப்படை என்று அவர்கள் எதையும் கூறவில்லை. சிற்றிலக்கியங்களுக்கு விளக்கம் கூறும் பாட்டியல் நூல்கள் யாப்பு, பாடுபொருள், உத்தி, எண்ணிக்கை என்ற அடிப்படையில் இலக்கிய வகைகளைப் பகுத்துள்ளனர். எனவே அவர்கள், காலத்தில் பாகுபாட்டிற்கான சிந்தனைகள் தோன்றின என்று நாம் அறியலாம். திறனாய்வை அறிந்து கொள்ளும் நாம், இந்த வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இலக்கிய வகையின் விளக்கம்

தமிழ் இலக்கிய மரபிலும், தொடக்க காலத்தில், தன் உணர்ச்சிப்பாட்டு, காப்பியம் என்ற இலக்கிய வகைகளே காணப்படுகின்றன. இலக்கியம் என்பது கவிதை யாகவே இருந்து வந்துள்ளது. உரை எழுதுவதற்கு மட்டுமே உரைநடை பயன்பட்டது. அதுவும் பிற்காலத்தில்தான்.

 சிலப்பதிகாரக் காப்பியத்தில் ஆங்காங்கே, சில இடங்களில் உரைநடை கலந்து வருகிறது. அது மிகக் குறைவு. உரைநூற்களிலும், சிலப்பதிகாரத்திலும் இடம் பெறும் உரைநடை கவிதைத் தன்மை கலந்ததாக உள்ளது. தன் உணர்ச்சிப் பாடல் எனப்படும். தனியான கவிதை, காப்பியம், சிற்றிலக்கியம் என்பன தொடக்ககால இலக்கிய வகைகள். இவையாவும் கவிதையில் அமைந்தவை.

தொடக்கத்தில் அகம், புறம் என்று பாடுபொருள் அடிப்படையில் இலக்கிய வகைகள் அமைந்தன. பின்னர் நீதி கூறுவதற்குக் கவிதை பயன்பட்டது. காப்பியம் கதை தழுவிய பாடல். சிற்றிலக்கியம் கடவுள், அரசன் புகழ் பாடுவதற்காகப் பாடப்பட்டவை. புராணம், காப்பிய அமைப்பில் அமைந்த கதை தழுவிய பாடல்.

உரைநடை, ஐரோப்பியர் வருகையுடன் நடைமுறைக்கு வந்தது. புனைகதை இலக்கியமான நாவல், சிறுகதை, குறுநாவல் என்பன ஒருவகை புளை கதை அல்லாத ஏனைய உரைநடை நூல்கள் ஒருவகை, சுட்டுரை, வாழ்க்கை வரலாறு, சிறுவர் நூல், பயண நூல், கடிதம், நாட்குறிப்பு என்பன உரைநடை நூற்களின் வகைகளாகும்.

பழைய காலத்தில் இருந்து வந்த காப்பியம், புராணம் இடத்தை நாவல் பெற்று விட்டது. யாப்பு நெறியில் அமைந்த கவிதை குறைவாகவும், இலக்கணம் மீறிய கவிதையான புதுக்கவிதை மிகுதியாகவும் இப்போது படைக்கப் படுகின்றன.

புதுக்கவிதை, அடுத்த நிலையில் ஹைக்கூ, சென்ரியு என்று புதிய வகைகளாக வகைகளை இவ்வாறு வளர்ந்தள்ளது. தமிழ் இலக்கிய வகைப்படுத்தலாம். திறனாய்வுப் பாடம் படிக்கும் நமக்கு இந்த வகைளும், வரலாற்றுப் பின்னணியும் தெரிந்திருக்க வேண்டும்.

இலக்கிய வகையின் பகுப்பு

இலக்கிய வகைப்பாடு செய்வதற்குரிய அடிப்படைகள் பற்றி கூறப்படவில்லை. ஆனால், செய்யப்பட்டுள்ள வகைப்பாட்டைக் கொண்டு, திறனாய்வாளர்களாகிய நாம், பாகுபாட்டின் அடிப்படைகளைக் கண்டறிய வேண்டும்.

 தொல்காப்பியம், அகம், புறம் என்ற உள்ளடக்க அடிப்படையிலான இருபெரும் பகுப்பை கூறி இலக்கணம் கூறுகிறார். எனவே அவருக்கு முன்பு இந்த வகைப்பாடு இருந்ததென அறியலாம்.

செய்யுள், பாட்டு என்ற பெயர்களில் கவிதையை அவர் குறிக்கிறார். இவை தனிச்செய்யுள், நூல் பற்றி அவர் கூறுவதை முன்னரே கண்டோம். அவர் உரை பற்றியும் கூறுகிறார். அங்கதம் (பழிப்பதுபோலப் புகழ்வது), பிசி (குறிப்பாகக் கூறல் ), முதுமொழி (பழமொழி) போன்ற வகைகளையும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். விருந்து என்ற புதுவகை குறித்தும் அவர் கூறுகிறார். 

எனவே இலக்கிய வகைகள் குறித்த பரந்த அறிவு அவரிடம் காணப்படுகிறது. பிற்காலத்தில் தோன்ற இருக்கிற இலக்கிய வகைகளைப் புதுமை (விருந்து என்று அவர் கூறுவது புதுமையான வகைகள்) என்று அவர் குறிப்பிடுகிறார். விரிவாக இலக்கிய வகைகளைக் பிற்காலத்தில் நன்னூல் இவ்வளவு குறிப்பிடவில்லை.

தண்டி அலங்காரம் வடமொழி மரபைப் பின்பற்றிப் பெருங்காப்பியம், காப்பியம் ஆகிய இலக்கிய வகைகளுக்கு விளக்கம் கூறுகிறது. பாட்டியல் நூல்கள், பிரபந்த மரபியல், சதுரகராதி என்பவை சிற்றிலக்கிய வகைகளுக்கு விளக்கம் கூறுகின்றன.

பெரும்பாலும் உள்ளடக்கம், பாடல் எண்ணிக்கை, யாப்பு, உத்தி ஆகிய அடிப்படைகளில் இலக்கிய வகைகள் பகுக்கப்பட்டுள்ளன. பாட்டியல் நூலார் காலத்தில், நடைமுறையிலிருந்த இலக்கிய வகைகளைக் கொண்டு இந்த விளக்கம் கூறப்பட்டுள்ளது என்று நாம் முடிவு செய்யலாம்.

உரைநடை நூற்களை வகைப்படுத்தியது பிற்காலத் திறனாய்வாளர் பணியாகும். இதற்கு அடிப்படை மேலை நாட்டு இலக்கியவகைப்பகுப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். ஏனென்றால் புனைகதை, புனைகதை அல்லாத பிற உரைநடை நூல்கள் என்பன ஐரோப்பியர் தாக்கத்தால் நம்மிடம் தோன்றியவை. 

எனவே வகைப்பாடும் அங்கிருந்து புறப்பட்டுள்ளது என்று நாம் அறிய வேண்டும். புதுக்கவிதை, ஹைக்கூ போன்ற கவிதை வகைகளும் நமக்கு மேனாட்டிலிருந்து வந்தன. கவிதை, உரைநடை, இலக்கிய வகைகளை மிக நுட்பமாகச் சிறு சிறு வகைகளாகப் பகுப்பதற்கு உள்ளடக்கம், உருவம், உத்தி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டன. இலக்கியத் திறனாய்வில் காணப்படும் இச்செய்திகளை நாம் அறிந்து கொள்வது பின்வரும் பாடப் பகுதிகளைக் கற்பதற்கு உதவும்.

Comments


EmoticonEmoticon