Monday, 12 January 2026

இலக்கிய உத்தியின் மேல்நாட்டவர் கருத்து

இலக்கிய உத்தி என்பது. இலக்கியத்தில், கருத்தைப் புலப்படுத்துவதற்குரிய நெறியாகும். இலக்கியம் அதைப் படிப்பவருக்குச் சுவை தருகிறது. அடுத்த நிலையில் அழகுணர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

ஒரு கருத்தைக் கூறும் இலக்கியம், படித்தவரிடம் அது எப்படிச் சொல்லுகிறது? நேரடியாகவா? குறிப்பாகவா என்று பார்த்த திறனாய்வாளர், குறிப்பாகச் சொல்லும்போது சுவை கூடுகிறது என்று அறிந்தனர்.

 எதையும் வெளிப்படையாகச் சொன்னால், அது பிரச்சாரமாக நின்று விடும். எனவே திறனாய்வாளர்கள், குறிப்பாகவும் அழகாகவும் (கலைநயத்தோடு) படிப்பவர், தேடி அறியுமாறும் கருத்து கூறப்பட வேண்டும் என்று விளக்கினர். இதற்கு உதவும் நெறிகள் உத்தி என்று அழைக்கப்பட்டன. கவிதையின் யாப்பு, மொழி, வடிவம் என்ற அனைத்தும் உத்தி என்பதில் அடங்கும்.



படிக்கும் வாசகரிடம் எந்த விதமான விளைவை ஏற்படுத்த வேண்டுமென்று படைப்பாளர் விரும்புகிறாரோ, அதற்கு உதவுவது இலக்கிய உத்தியாகும். இலக்கியப் படைப்பில் மொழியைப் பயன்படுத்துவதிலிருந்து, சரியான உருவத்தை ஆளுவது வரை ஆசிரியர் இந்த நோக்கத்திலேயே, செயல்படுகிறார். சான்றாக, 'வந்தனள் ஒரு செந்திரு' என்று எழுதுவது வழக்கமான தமிழ் இலக்கண மரபிற்குப் பொருந்தாது.

வினைமுற்று (வந்தனள்) முதலிலும், எழுவாய் (செந்திரு) பின்னுமாக வாக்கிய அமைப்பில் வராது. ஆனால் நாவலாசிரியர் இவ்வாறு மாற்றி அமைப்பதன் மூலம் படிப்பவருக்குச் செயலின் விரைவு அவள் வந்த செயல் முதன்மையானது என்பவற்றை அழுத்தமாகக் கூற விரும்புகிறார் ஆசிரியர். மொழியை இவ்வாறு முறைமாறிப் பயன்படுத்துவது, நாவலாசிரியர் பின்பற்றும் உத்தியாகும்.

இலக்கிய உத்தியின் விளக்கம்

இலக்கியத்தில் கருத்தை வாசகருக்குக் கூறப் பயன்படும் நெறிமுறை உத்தி என்று கண்டோம். இலக்கியப் படைப்பின் மூலமாகப் படைப்பாசிரியர் கூற விரும்பிய கருத்தை வலிமையோடும் அழகியல் உணர்வுடனும் கூறும் முறை இலக்கிய உத்தி எனப்படும். கருத்து, உணர்ச்சி, மனிதப்பண்பு என்ற கதை இலக்கியத்தின் மூலம் படைப்பாசிரியர் எதைக்கூற விரும்புகிறாரோ, அதைக் கூறப் பயன்படும் முறை உத்தி என இதனால் அறியலாம்.

படிக்கும் வாசகரிடம், தாம் படைத்துள்ள இலக்கியம் என்ன விதமான விளைவை - பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று படைப்பாளர் நினைக்கிறாரோ அதைச் செய்வது உத்தியாகும். இந்த உத்தி மரபிலிருந்தோ புதியதாகவோபடைப்பாளர் படைத்துக் கொண்டது ஆகும்.

படைப்பாளர் நேரடியாகக் கூறுவது, குறிப்பாகப் புலப்படுத்துவது, வாசகர் உய்துணருமாறு அமைப்பது என்று பல்வேறு வகைகளில் உத்தி அமையும். தன் படைப்பிற்கு எது ஏற்றது என்று படைப்பின் அடிப்படையில் ஆசிரியன்தான் முடிவு செய்ய வேண்டும். இலக்கியத்தின் உள்ளடக்கமே இதை முடிவு செய்யும். இவ்வாறு உத்தி பற்றி மேனாட்டுத்திறனாய்வாளர்கள் விளக்கியுள்ளனர். சான்றாக.

'சுட்டது குரங்குஎரி சூறை யாடிடக்

கெட்டது கொடிநகர் கிளையும் நண்பரும் பட்டனர் பரிபவம் பரந்தது எங்கணும்

இட்டதுஇவ் அரியணை இருந்தது என்னுடல் (கம்பராமாயணம்)

என்ற கம்பன் பாடலைக் காண்க. இக்கவிதையில் இதுவரை தன் ஆற்றல் மூலம் பிறரைத் துன்புறுத்தி அழச் செய்த இராவணன் அழும் அவல உணர்ச்சி உள்ளது. அந்த அழுகுால் அவல உணர்ச்சியே கம்பர் கூற விரும்பும் கருத்து. அதை வெளிப்படுத்துமாறு, சொற்கள், வல்லின ஓசை, மொழியமைப்பு, ஆணவம் என்ற மெய்ப்பாடு அனைத்தும் உத்திகளாக ஆளப்பட்டுள்ளன.

இலக்கிய உத்தியின் பாகுபாடு

பாட்டுக்குரிய (கவிதை) உத்திகளை உணர்ச்சி, கற்பனை, ஒலிநயம்,உவமை, உருவகம், குறிப்புப் பொருள், முரண், யாப்பு என்று விளக்குகின்றனர். பெரும்பாலும் கவிதை குறித்த திறனாய்வுகளில் இந்த உத்திகள் சுட்டப்படுகின்றன. அடிப்படையில் சுவிதைக்கு இவைதான் உத்திகள் என்று வரையறுத்துக் கூறவில்லை. கவிதைகள் தோன்றிய பிறகு அவற்றைப் படித்துச் சுவைத்து நயங்களை எடுத்துக்கூறிய திறனாய்வாளர்கள், இந்த உத்திகளை விளக்கினர். ஒருவகையில் கிடைத்த இலக்கியங்களைக் கொண்டு உத்திகளை விளக்கினர், புதிது புதிதாக இலக்கியம் தோன்றவே, திறனாய்வு வளர்ந்தது. அதன் விளைவாக, இலக்கிய வகை குறித்தும், உத்திகள் குறித்தும் விளக்கங்கள் நமக்குக் கிடைத்தன.

உரைநடையில் அமைந்த புனைகதை இலக்கியங்களில், எடுத்துரைக்கும் முறையை (Narration) அடிப்படையாகக் கொண்டு இலக்கிய உத்திகளை வகுத்தனர். ஆங்கில மொழியில் முதன் முதலாகத் தோன்றிய பாமெலா என்ற நாவல் கடித முறையில் அமைந்துள்ளது. அதன் நடையும் போக்கும் காப்பிய அமைப்பில் உள்ளன.

எனவே, நாவல் கூறும் முறை பற்றிய உத்தியை விளக்கவந்த திறனாய்வாளர்கள் கடித முறை உத்தி என்பதை இன்றியமை யாததாகக் கூறினர். தமிழில் மறைமலை அடிகள் எழுதிய கோகிலாம்பாள் கடிதங்கள். ஆர்.வி. எழுதிய ஸவிதா ஆகிய நாவல்கள்கடித முறையில் அமைந்தவை.

தன் வரலாற்று நாவல்,வரலாற்று நாவல், அறிவியல் நாவல், துப்பறியும் நாவல், குற்றவியல் நாவல் என்று நாவல் வகைகளை உள்ளடக்கம், உத்தி அடிப்படையில் பிரித்தனர். பின்னோக்கு, நனவோடை, ஆசிரியர் கூற்று, தன்மைக் கூற்று, முன்னிலை உத்தி என்று கதை கூறும் உத்தி முறைகளை விளக்கியுள்ளனர்.

நாவலுக்குரிய இந்த உத்திகள் சிறுகதைக்கும் பொருந்தும். உரைநடை இலக்கியப் பிற வகைகளில் உள்ள உத்திகள் குறித்தும் பொதுவாக நடை குறித்தும் திறனாய்வாளர்கள் விளக்கி உள்ளனர்.

காப்பியம், நாடகம் என்பவை மிகப் பழைமையான இலக்கிய வகைகள் என்று மேலே பார்த்தோம். அவைகளில் இடம் பெறும் உத்திகள் குறித்தும் விளக்கி உள்ளனர். திறனாய்வில் இவற்றை அறிந்து கொள்ளுவது நமக்கு உதவும் நம்முடைய மரபில் காணப்படும் உத்திகளோடு ஒப்பிட்டறிய இது துணை செய்யும்.

Comments


EmoticonEmoticon