உலகின் முதல் திரைப்படம் காட்டப்பட்டு ஏறத்தாழ 30 ஆண்டுகள் கழித்து, ஹாலிவுட் திரையுலகம் பேசும் படத்தை உருவாக்கியது. இத்தகைய பேசும்பட வரலாற்றைச் சுருக்கமாக இப்பகுதி விளக்குகின்றது.
உலகில் பேசும்படக் காலம்
1895 முதல் 1927 வரையுள்ள 32 ஆண்டுக்காலம், உலகத் திரைப்பட வரலாற்றில் மௌனத் திரைப்படக் காலம் (Silent Era) என்று கூறப்படும். 1927ஆம் ஆண்டு. ஹாலிவுட் திரையுலகில் உலகின் முதல் பேசும்படமான'தி ஜாஸ் சிங்கர்' (The Jazz Singer) என்ற படம் தயாராகி, 1928இல் வெளியானது முதலாக உலகின் பேசும்பட காலம் (Talkies Era) தொடங்குகின்றது எனலாம்.
படச்சுருளில் ஒலியைச் சேர்க்கும் முயற்சிகள்:
மெளனத் திரைப்படங்கள் புழக்கத்திற்கு வருவதற்கு முன்னரேயே ஒலியைப் பதிவதும், பதித்த ஒலியைத் திரும்பவும் ஒலியாக மாற்றுவதுமான முயற்சிகள் உலகில் நிகழ்த்தன ஒலியை அல்லது ஒருவர் சூரலை ஓரிடத்திலிருந்து தொலை தூரத்திற்கு அனுப்பும் முயற்சியும் நிகழ்ந்தது.
கம்பிகளை இணைத்து ஒலியை நீண்ட தூரத்திற்கு அனுப்பும் முறையை 1857இல் அயர்லாந்து நாட்டின் அறிஞர் எல்.மே (LMay)) என்பவர் செயல்படுத்திக் காட்டினார் அதன்பின் ஒலிபரப்பில் புதிய மாற்றங்களுக்கான தாகம் அறிவியல் உலகில் அப்போது அதிகம் இருந்தது.
ஒலியைப் பதிவு செய்தல் :
ஒலியைப் பதிவு செய்வது என்பது ஒலி அறிவியலில் சவாலான அடுத்தகட்ட நிலையாக இருந்தது. இந்த முயற்சியில் இறங்கியவர்களில் குறிப்பிடத் தக்கவர் தாமஸ் ஆய்வா எடிசன் ஆவார். ஒலி அலைகளை ஏதாவது ஒரு பொருளில் குறியீடாகப் பதிவு செய்ய முடியாதா? அப்படிப் பதிந்த குறியீடுகளைத் திரும்பவும் ஒலியாக மாற்றி ஒலிக்கச் செய்ய முடியாதா? என்று அவர் சிந்தித்தார். அதன் விளைவாக எடிசன் 'ஃபோனோகிராஃப்' (Phonograph) என்ற கருவியைக் கண்டுபிடித்தார்.
தாமஸ் ஆல்வா எடிசனைத் தொடர்ந்து பெர்லின் என்பவர் 1887இல் மெல்லிய தகட்டை அமைத்துப் பக்கவாட்டில் கீறும் ஊசியைக் கொண்டு அதன்மேல் ஒலியைப் பதியச் செய்தார். அந்தப் பதிவின்மீது மறுபடியும் ஊசியைச் செலுத்தி, மீண்டும் அதே ஒலியைக் கேட்க முடிந்தது. இவ்வாறு படிப்படியாக வளர்ந்து 'கிராமஃபோன்' என்னும் இசைத்தட்டுக் கருவி உருவானது!
பேசாத ஊமைப்படக் காலத்தில், ஒலியை கிராமஃபோனில் பதிவுசெய்து ஒலிக்கச் செய்து பார்த்தனர். ஆனால், படத்தில் வரும் காட்சியையும் அதற்கு நேரான ஒலியையும் இணைப்பது என்பது மிகவும் சிரமமாக இருந்தது. படத்தின் அசைவுக்கும் ஒலிக்கும் பொருந்தாமல் இருந்ததால் அதை ரசிக்க முடியவில்லை.
காட்சி பிலிமில் பதிந்திருக்கும். ஒலி (இசை) கிராமஃபோனில் பதிந்திக்கும். காட்சியும் ஒலியும் வெவ்வேறு கருவிகளில் பதிந்திராமல் ஒரே ஊடகத்தில் பதிவது சாத்தியமானால் மட்டுமே இரண்டும் ஒரே இயைபுடன் பொருந்தும் என்பதை உனார்ந்தனர்.
ஒலி - ஒளிப் பதிவு :
காட்சியை ஒளிப்பதிவு செய்யும்போதே. இசையை அல்லது ஒலியை ஒலிப்பதிவும் செய்து, மீண்டும் ஒலிக்கச் செய்யும் முறையை 1906ஆம் ஆண்டில் இரண்டு ஆங்கிலேயர்களான டபிள்யூ.டி.பி. டட்டெல் என்பவரும் யூஜெனி எ. லாஸ்டி என்பவரும் சேர்ந்து கண்டுபிடித்தார்கள். இதற்கு ஒளிமின்கலம் என்ற சாதனத்தைப் பயன்படுத்தினர்.
கிராமஃபோன் தட்டில் ஒலியைப் பதிந்து, அது திரைப்படம் திரையிடப்படும்போது ஒலிக்கச் செய்தனர் அது பார்வையாளர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை.திரைப்படத்தில் நடிகர்களின் வாயசைவுக்கு ஏற்றபடி ஒலித்தட்டின் இயக்கம் ஒத்து அமையவில்லை.
முதலாம் உலகப்போர் நிகழ்ந்த காலக்கட்டத்தில், திரைப்படத்தில் ஒலியைச் சேர்க்கும் முயற்சிகள் தடைபட்டன. பின்னர், ஜெர்மனியில் எங்கல், மாசோல், வோகி என்ற மூன்று பொறியாளர்கள் கூட்டாக இணைந்து மூன்றாண்டுகள் கடுமையாக உழைத்து ''ட்ரையர்கள்' ('மூவர் முயற்சி') என்ற ஒலி சேர்க்கும் முறையைக் கண்டுபிடித்தனர்.
1923ஆம் ஆண்டில், லீ.டி. ஃபாரெஸ்ட் என்பவர்'ஃபோனோ ஃபிலிம்' என்ற புதிய முறை ஒன்றினை அமெரிக்க நாட்டில் கண்டறிந்தார். இந்த ஃபோனோ ஃபிலிம் முறையைக் கொண்டு நியூயார்க்கில் உள்ள ரிவோலி தியேட்டரில் திரைப்படம் காட்டினர். படம் காண வந்த திரைப்பட ரசிகர்கள் இம்முறையினால் மிகவும் திருப்தி அடைந்தனர்.
இதன் அடுத்தடுத்த கட்டமாக வளர்ந்து, திரைப்படச் சுருளிலேயே ஒலியைப் பதியும் முறையை எட்டிப்பிடிக்க 1926ஆயிற்று, முதன்முதலாகப் பேச்சு, பாடல் இல்லாமல் வெறும் சப்தத்தை மட்டும் ஒலித்து வெளிவந்த படம் 'டோன்ஜூன்' என்பதாகும். 1926இல் 'வார்னர்' சகோதரர்களால் தயாரிக்கப்பட்ட படம் அது. திரைப்படத்தில் உரையாடலையும் பாடல்களையும் சேர்க்க மேலும் ஓராண்டானது.
திரைச்சுருளில் ஒலியைச் சேர்க்கும்போது புதிய சிக்கல் பிறந்தது. மௌனப்படச் சுருளில், ஒரு வினாடிக்குப் 16பிரேம் என்ற கணக்கிலேயே படம்பிடித்து வந்தார்கள். ஒலியை அல்லது ஒருவர் பேசும், பாடும் குரலைப் பதிவதற்கு அந்த 16 பிரேம் போதாததாக இருந்தது. அதனால், படப்பிடிப்பில் ஒரு வினாடிக்கு 18, 20 பிரேம்கள் வரை படம்பிடிக்கும் கேமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்று நடைமுறையில் ஒரு வினாடிக்கு 24 பிரேம்கள் என்ற கணக்கைவிட பல மடங்கு வேகத்தில் படம்பிடிக்கப்படுகின்றன என்ற உண்மையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இன்றுள்ள படங்களைப் பார்த்துப் பழகிய நாம் 1930களில் வெளிவந்த பழைய சார்லி சாப்ளின் படங்களைப் பார்த்தால், மனிதர்களின் அசைவுகள் இயல்பாக இல்லாமல் வெட்டிவெட்டி நடப்பது போலத் தெரியும். அதற்குக் காரணம், அப்போது ஒரு வினாடிக்கு 24 பிரேம்கள் இல்லை என்பதுதான். ஒரு வினாடிக்கு 18 அல்லது 20 பிரேம்கள் என்று வளர்ந்து, இறுதியில் 24 பிரேம்கள் இருந்தாலே, நகர்வு மிக இயல்பாகத் தோன்றுவதாக அமைந்தது
உலகின் முதல் பேசும்படம் :
உரையாடலையும் பாடல்களையும் கொண்டு உலகில் முதல் பேசும்படமாக'தி ஜாஸ் சிங்கர்' (The Jazz Singer) என்ற திரைப்படம் 1927இல் தயாரிக்கப்பட்டு 1928இல் வெளிவந்தது. அது ஓர் ஆங்கில மொழிப் படமாகும். ஆனால், வஊமைப்படங்களைத் தயாரிக்கும் செலவோடு பேசும்படத்தைத் தயாரிப்பதற்கான செல்லை ஒப்பிடும்போது, பன்மடங்கான தொகை தேவைப்பட்டது. அதனால், மௌனப் படங்கள் முற்றிலும் நின்றுபோய்விடவில்லை.
இந்தியாவில் பேசும்படக் காலம்
உலகில் திரைப்படம் பேசவும் பாடவும் தொடங்கி ஒரு சில ஆண்டுகளுக்குள்ளாகவே நம் இந்திய நாட்டிலும் திரைப்படங்கள் பேசத் தொடங்கிவிட்டன. அந்த வரலாற்றினை இப்பகுதிச் சுருக்கமாக விளக்குகிறது.
இந்தியாவில் திரையிடப்பட்ட முதல் பேசும்படம்:
1896 ஆம் ஆண்டு முதலாக மௌனப் படங்களையே கண்டுவந்த நம் இந்திய மக்களுக்குப் பேசும்படம் பற்றிய அறிமுகம் 1929இல் உருவானது. 'காதலின் இனிய கீதம்' என்று பொருள்படும் 'தி மெலடி ஆஃப் லவ்' (The Melody of Love) என்ற ஆங்கில மொழித் திரைப்படம்தான் இந்தியாவில் காட்டப்பட்ட முதல் பேசும்படம் ஆகும். இந்தப் படம் கல்கத்தாவில் முதலில் திரையிடப்பட்டது.
இந்திய முதல் பேசும்படம்:
இந்தியாவில் முதல் பேசும்படத்தை இயக்கித் தயாரித்த பெருமை அர்தேஷிர் இரானி (Ardeshir Irani) என்பவரையே சாகும். 1931ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட 'ஆலம் ஆரா' என்ற இந்திப் படமே இந்திய மொழிகளில் வெளிவந்த இந்திய முதல் பேசும்படம் என்ற பெருமையைப் பெற்றது.
தமிழ் மொழியில் முதல் பேசும்படம்:
தமிழ் மொழியில் பேசியும் பாடியும் வெளிவந்த முதல் படம் 'காளிதாஸ்' என்பதாகும். 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி சனிக்கிழமை அந்தப்படம் சென்னையில் வெளியானது. 'கினிமா சென்டிரல்' என்னும் திரையரங்கில் அது வெளியானது.
இந்தப் படத்தில் கதாநாயகி வித்யாதரி (டி.பி. ராஜலட்சுமி) தமிழில் பேசுவாள்; பாடுவாள். அவள் தமிழில் கேட்கும் கேள்விகளுக்குக் கதாநாயகள் காளிதாசன் தெலுங்கில் பதில் சொல்வானாம்! வேறு சில துணைப் பாத்திரங்கள் இந்தியிலும் பேசியிருந்தார்களாம்! இது 'முதல் தமிழ்ப்படம்' என்பதைப் போலவே 'முதல் தெலுங்குப் படம்' என்ற பெயரையும் பெற்றது. 'காளிதாஸ்' திரைப்படத்தில் அன்றைய நாடகங்களில் ஒலித்த தேசபக்திப் பாடல்களும் இடம்பெற்றிருந்தன.
'இந்தியர்கள் நம்மவர்களுக்குள் ஏனோ வீண்சண்டை?"
என்ற பாடல் இந்து-முஸ்லிம் கலவரத்தை எச்சரித்து ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்ற தேசபக்தி உணர்வை ஊட்டியது. அன்றைய நாடகப் பாடலாசிரியர் மதுர. பாஸ்கரதாஸ் எழுதிய இந்தப் பாடல் தமிழ் மக்களிடையே தேச ஒற்றுமையை வளர்த்தது.முதல் தமிழ்ப்படத்தின் பாடலாசிரியர் என்ற பெருமை மதுர. பாஸ்கரதாஸுக்கு வாய்த்தது.
இத்திரைப்படம் பொதுமக்கள் பார்வைக்கு 31-10-1931இல் வெளியாகி இருந்தாலும் அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே பத்திரிகையாளர்களுக்குச் சிறப்புக் காட்சியாக வெளியிட்டார்கள் எனத் தெரிகிறது. 29-10-1931 ''சுதேசமித்திரன்' இதழில் 'காளிதாஸ்' திரைப்படம் குறித்த வெளியாகியிருப்பது இதற்குச் சான்றாகும்.
