ஒரு சமூகத்தில் ஊடகங்களுக்குரிய பொறுப்புகளை ஆராய்வது அவசியமாகிறது. ஊடக அவ்வகையில் விளைவுகள் குறித்த கோட்பாடுகளின் பரிணாம வளர்ச்சியில், தொடக்கத்தில் ஊடகங்கள் சக்தி வாய்ந்தவை என்றும், நேயர்கள் செயலற்றுக் கொடுக்கப்பட்டதை ஏற்பவர்கள் என்றும் நம்பப்பட்டு வந்தது. ஊடகங்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு பொதுக் களமாகவே இயங்குமாறு யோசனை தெரிவித்தார் ஹேபர்மாஸ்.
இதை சூது வாது அற்றதென்றும், புனைவியல் சார்ந்தது என்றும் விமர்சகர்கள் ஒதுக்கித் தள்ளினர். நேயர் கல்வி, இனம், பால், சமயம் ஆகிய காரணித் தொகுதிகளாலும், குடும்பம், நண்பர் குழாம் உள்ளிட்ட மாற்று விவாதக் களங்களாலும், பன்முக ஊடகங்களைப் பொறுத்து அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் தீர்மாளிக்கப் படுகின்றன என்று தற்போது நம்பப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்தப் பிரிவு தகவல் தொடர்புக்கும் சமூகத்திற்கும் உள்ள தொடர்புகள் பற்றிச் சுருக்கமாக உங்களுக்கு விளக்குகிறது.
ஊடக விளைவுகள் குறித்த கோட்பாடுகளின் பரிணாம வளர்ச்சி
ஊடகங்கள் சக்தி வாய்ந்தவை என்றும் நேயர்கள் செயலற்றுக் கொடுக்கப்பட்டதை ஏற்பவர்கள் என்றும் தொடக்ககாலத்தில் நம்பப்பட்டு வந்தது. பின்னர் வந்த ஜோசப் க்ளாப்பர், காட்ஸ், லாசர்ஸ்பெல்ட் முதலான தகவல் தொடர்பியல் அறிஞர்கள், ஊடகங்கள் வலுப்படுத்தும் பணியைச் செய்கின்றனவே அன்றி, மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை என்று அறிவித்தனர்.
அடுத்தகட்ட நகர்வாகப் பண்பாட்டு ஆய்வுகளை நடத்திய நியோ மார்க்சிஸ்ட்டுகள், ஆளும் அதிகார வர்க்கத்தினாலும், முதலாளிகளாலும், கருத்தியல் செல்வாக்கைப் பெற ஊடகங்கள் வலுவான காரணிகளாகக் கருதப்படுவதாகவும், பாரிய விளைவுகளுக்கு அவையே பொறுப்பு என்றும் அறிவித்தனர். அரசியல்சார் பொருளாதார நோக்கில் ஊடகங்களை அணுகியவர்கள், ஊடகங்களை அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பின் அங்கமாகக் கருதினர். முதலாளித்துவம் மற்றும் வலுவான நிறுவனங்களின் பிரதிநிதிகளாகவும் ஊடகங்கள் கருதப்பட்டன. தவிர ஊடகங்கள் வலுவான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் கருதப்பட்டது.
பின்னர், இனப்பரப்பு விளக்கவியல் திருப்பம் அறிமுகமானபோது, நேயர்கள் பிரதியைச் செயலூக்கமுடன் சுட்டியுரைப்பவர்கள் என்றும் கருதப்பட்டது. இதையடுத்து, கவனக்குவிப்பு நேயர்கள் பக்கம் திரும்பியது. இதன் காரணமாக ஊடகங்கள் குறைவான பாதிப்பையே ஏற்படுத்துவதாக உணரப்பட்டது.
ஊடகங்கள் என்பது அனைவருக்கும் பொதுவான ஒரு பொதுக்களமாகவே இயங்குகின்றன என யோசனை தெரிவித்தார் ஹேபர்மாஸ். இதைச் சூது வாது அற்றதென்றும், புனைவியல் சார்ந்தது என்றும் விமர்சகர்கள் ஒதுக்கித் தள்ளினர்.
இவை யாவற்றிற்கும் அப்பால் இன்று, ஊடகங்களின் தாக்கமானது நேயர் கல்வி. இனம், பால், சமயம் முதலான காரணித் தொகுதிகளாலும், குடும்பம், நண்பர் குழாம் உள்ளிட்ட மாற்று விவாதக் களங்களாலும், பன்முக ஊடகங்களைப் பொறுத்தும் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் தீர்மானிக்கப் படுகின்றன என்ற முடிவிற்கு தகவல் தொடர்பு அறிஞர்கள் வந்துள்ளனர். கீழே சில ஊடக விளைவுக் கோட்பாடுகளைக் காண்போம்.
1. நேரடி விளைவுகள்
ஊடகங்கள் சக்தி வாய்ந்தவை. நேயர்கள் செயலற்றுக் கொடுக்கப்பட்டதை ஏற்பவர்கள்.
2. குறைந்த அளவிலான, அல்லது வரையறுக்கப்பட்ட விளைவுக் கோட்பாடு
ஜோசப் களாப்பர், காட்ஸ், லாசர்ஸ்பெல்ட் ஆகியோர் ஊடகங்கள் வலுப்படுத்தும் பணியைச் செய்கின்றனவே அன்றி, மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை என்கின்றனர்.
3. பண்பாட்டு அய்வுகள் - நியோ மார்க்சிஸ்ட்
ஆளும் அதிகாரவர்க்கத்தினாலும், முதலாளிகளாலும், கருத்தியல் செல்வாக்குகைப் பெற ஊடகங்கள் வலுவான காரணிகளாகக் கருதப்படுதல்; பாரிய விளைவுகளுக்குப் பொறுப்பேற்றல்.
4. அரசியல் சார் பொருளாதாரம்
ஊடகங்கள் அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பின் அங்கமாகக் கருதப் பட்டன. மேலும் முதலாளித்துவம் மற்றும் வலுவான நிறுவனங்களின் பிரதிநிதிகளாக ஊடகங்கள் ககுதப்பட்டதுடன் இவை வலுவான வினைவுகளை ஏற்படுத்துவதாகவும் கருதப்பட்டன.
5. அரசியல் சார் பொருளாதாரம் - பொதுக்களக் கோட்பாடு
பண்பாட்டு ஆய்வுகள் - புதிய நேயர் ஆய்வுகள் : இனப்பரப்பு விளக்கவியல் திருப்பம் அறிமுகமானபோது, நேயர்கள் பிரதியைச் செயலூக்கமுடன் சுட்டியுரைப்பவர்கள் என்றும் கருதப்பட்டது. இதனால் கவனக் குவிப்பு நேயர்கள் பக்கம் திரும்பியது. மேலும் ஊடகங்கள் குறைவான பாதிப்பையே ஏற்படுத்துவதாக உணரப்பட்டது.
ஊடகங்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு பொதுக் களமாகவே இயங்குமாறு யோசனை தெரிவித்தார் ஹேபர்மாஸ். இதைச் சூது வாதமற்றதென்றும், புனைவியல் சார்ந்தது என்றும் விமர்சகர்கள் ஒதுக்கித் தள்ளினர்.
6.கருத்துகளின் கலவை / ஒருங்கிணைந்த கோட்பாடு
நேயர் கல்வி, இனம், பால், சமயம் ஆகிய காரணித் தொகுதிகளாலும், குடும்பம், நண்பர் குழாம் உள்ளிட்ட மாற்று விவாதக் களங்களாலும், பன்முக ஊடகங்களைப் பொறுத்து அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் நீர்மானிக்கப்படுகின்றன.
பண்பாட்டுத் தொழில்நுட்பங்களுக்கும் நாகரிகத்திற்கும் இடையிலான உறவுகள்
உலக வரலாறு. பண்பாட்டுத் தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையிலான நாகரிக வளர்ச்சியைப் பின்பற்றுகிறது. இப்பின்னணியில் தொழில் நுட்பத்தின் ஒவ்வொரு காலப்பாங்கும் பொது அனுபவத்திற்கு ஒரு வித பண்பை வழங்குவதுடன். வடிவம் மற்றும் உள்ளடக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன்பொருட்டு மார்ஷல் மெக்லூஹன் ஊடகமே செய்தி என்றார்.
- முதலாம் நாகரீகம் வரிவடிவ எழுத்தின் தோற்றத்துடன் ஆரம்பமாகிறது.
- இரண்டாம் நாகரிகம் நெடுங்கணக்கு எழுத்து முறையுடன் தொடங்குகிறது.
- மூன்றாம் நாகரிகம் ஐரோப்பாவில் அச்சின் அறிமுகத்துடன் இணைந்தே தொடங்குகிறது.
- நான்காம் நாகரிகம் மின்னணு தொடர்பாடலின் அறிமுகத்துடன் ஆரம்பமாகிறது.
- ஐந்தாம் கட்ட நாகரிகம் கணினிகளின் அறிமுகத்துடன் ஆரம்பமாகிறது.
சமூகமும் தகவல் தொடர்புக் கருவிகளும்
தகவலை அனுப்புபவருக்கும் பெறுபவருக்கும் இடையில் தொழிற்படும் தகவல் தொடர்பு சாதனங்கள் தகவல் தொடர்பு ஊடகங்கள் என்றழைக்கப்படுகின்றன. நாளிதழ்கள், வார, மாதப் பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி, திரைப் படங்கள், குறுந்தகடுகள், இணையம் போன்றவை மக்கள் தொடர்பு ஊடகங்களாகக் கருதப்படுகின்றன.
ஊடகங்கள் ஒரு நிலப்பரப்பின் பெருவாரியான மக்களைச் சென்றடையவும், சில வேளைகளில் உலகளாவிய அளவில் மக்களைச் சென்றடையவும் உரிய ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. மேலும் இடைவிடாது ஊடகங்களின் பிடியில் சிக்குண்டிருப்பது நவீன வாழ்வின் இன்றியமையாத பண்புகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. இவற்றில் பெருமளவு கவனத்தை ஈர்க்கும் கருவியாகத் தொலைக்காட்சி விளங்குவதால், நவீன சமூக மயமாக்கும் கருவியாகவும் தொலைக்காட்சி விளங்குகிறது.
நவீன வாழ்வுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ள தொலைக்காட்சி, வெகுஜன ஆர்வத்தை ஈர்க்கும் கருவியாக விளங்குகிறது. குறிப்பாக நமது அன்றாடச் சமூகச் சிக்கல்கள் குறித்த விவாதங்களையும் அது எழுப்பத் தவறுவதில்லை.காட்டாக.
ஊடகங்கள் நடுநிலையுடன் செய்திகளை வழங்குகின்றனவா?
* தொலைக்காட்சிகளில் வன்முறையையும் பாலியல் உணர்வுகளையும் தூண்டும் காட்சிகள் அதிகம் இடம்பெறுகின்றனவா?
தொலைக்காட்சிகளில் விவாதிக்கப்படுபவை பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவையா?
இணையத்தில் அணுகத்தக்க தகவல்களுக்கு நெறிப்படுத்தல் தேவையா?
நமது விழுமியங்களைக் கட்டியெழுப்புவதில் ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கின்றனவா?
குழந்தைகளைப் பாதிக்கும் வகையில் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒளிபரப்புகள் அமைகின்றனவா?
ஊடகங்களுக்கென்று வெளிவிவகாரக் கொள்கை என்ற ஒன்று உள்ளதா?
. சிறுபான்மையினர் குறித்த செய்திகளைக் கையாள்வதில் கூருணர்வுடன் இயங்குகின்றனவா? ஊடகங்கள்
செய்தி பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட பெண்களின் பெயர்களை அறிக்கைகளில் இடம்பெறச் செய்வது ஊடகங்களுக்கு அவசியமான ஒன்றா?
சிகரெட், புகையிலை, மது தொடர்பான விளம்பரங்களைக் கட்டுப்படுத்த வேண்டுமா?
குற்றச் செய்திகளை வெளியிடும்போது, அதில் இடம்பெறும் விவரணைகள், பொதுமக்களிடம் அச்ச உனார்வை ஏற்படுத்துவதை அனுமதிக்கலாமா?
ஊடகங்கள், அரசியல் பரப்புரைகளை அறிக்கையிடும்போது, பக்கச் சார்பற்று வெளியிடுகின்றனவா?
விளம்பரங்களை வெளியிடும்போது அறநெறிகள் சுவனத்தில் கொள்ளப் படுகின்றனவா?
ஊடகங்களின் உரிமை சில முதலாளிகளிடம் மட்டும் சிக்கிக்கொள்ளும் போது, ஊடகங்களின் உள்ளடக்கம் சிதைக்கப்படுகிறதா?
முதலான மேற்கண்ட வினாக்களுக்கு விடை தெரிய வேண்டுமானால், நாம் இன்றைய நவீன சமூகத்தில் ஊடகங்களின் பங்கிளையும், அவை ஏற்படுத்தும் விளைவுகளையும் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் ஊடகங்களுக்கும் சமூகத்திற்குமான உறவு எத்தகையது? சமூகவியல் நோக்கில் ஊடகங்கள் நமது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் (நுண்ணிய அளவிலும்), பொருளாதாரம், அரசியல், சமயம், தொழில் நுட்ப வளர்ச்சி ஆகிய சமூகத்தின் பெரும் சக்திகளுக்கிடையில் ஊடகங்களின் பங்கு குறித்த விரிவான நிலையிலும் இதை நாம் அணுக வேண்டியுள்ளது.
2.4 தகவல் தொடர்பு எனும் குருட்டு மகிழ்ச்சி
மூலம் ழா(ன்) பொத்ரியார் சிந்தனைகளை ஆழமான ஒரு தத்துவச் சொல்லாடல் பிரதிபலிக்கும் 'தகவல் தொடர்பு எனும் குருட்டு மகிழ்ச்சி' என்ற கட்டுரையை ஆங்கிலம் வழியாகக் க பஞ்சாங்கம் மொழிபெயர்த்துள்ளார். அதிலிருந்து ஒரு பகுதியைக் காண்போம்.
புகழ்பெற்ற ஒரு ஜப்பான் நாட்டுக் கார், ஊடங்களோடு பேசுகிறது; நீங்கள் ஆணையிடாமலேயே தானாகவே உங்களுடைய பொதுவான மனநிலையையும், பொதுவான பண்பினையும் அந்த நேரத்து நிலையினையும் உங்களுக்கு இயற்கையாய் எடுத்துரைக்கிறது, மேலும் நீங்கள் முறையாகச் செயல்படா விட்டால், உங்களுக்காகச் செயல்படவும் அது மறுத்துவிடுகிறது.
பொதுவான உங்கள் வாழ்க்கை நடைமுறையோடு உடன்படிக்கை செய்துகொண்டு. உங்கள் பங்காளியாகவும் ஆலோசகராகவும் உங்கள் கார் உங்களோடு வினைபுரியத் தொடங்கிவிடுகிறது.
இப்படி உங்களிடம் இருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாதபடி உருவாக்கப் பட்டுள்ள ஒரு காரோடு நீங்கள் இணைக்கப்பட்டுவிடுகிறீர்கள். இந்நிலையில் இந்தக் காரோடு எவ்வாறு தொடர்பு வைத்துக் கொள்வது என்பதே அடிப்படைப் பிரச்சனையாகி விடுகிறது.
இவ்வாறு தன்னுடைய சொந்தப் பொருளோடு கொள்ளுகிற ஒயாத தேர்வு நிலையே உங்களுடைய வாழ்வாகிவிடுகிறது. இந்தக் கோணத்தில் பார்க்கும்பொழுது வேகமோ அல்லது இடம்பெயர்தலோ, தனி மனிதரோ அல்லது போட்டிகளோ, பெருமைகளோ இப்பொழுது ஒரு பொருட்டல்ல. மாறாகச் சில காலத்திற்கு முன்புவரை கார் என்பது அதன் வேகத்தோடு இணைத்துப் பார்க்கப்பட்டது. எனவே, நான் அதிகம் ஓட்டுகிறேன், ஆனால் கொஞ்சம்தான் நுகர்கிறேன் என்ற நிலைதான் நேற்று வரை நிலவியது.
ஆனால் இன்று உலகமயமாகிவிட்ட நிர்வாசு அமைப்பினால், கார் உட்பட நம்மைக் கட்டுப்படுத்தும் கருவிகளாக வடிவமைக்கப்படுகின்றன. இந்தக் கருவிகள் தனி மனிதரின் பிடிமானத்திற்குள் அகப்படாத, தனக்கேயான சுழற்சி மாடத்தை வடிவமைத்துக் கொள்ளுகின்றன. மேலும் தங்களுக்கேயான அரங்க ஒப்பனைகளைக் காப்பாற்றிக் கொள்ளுகின்றன. அங்கே ஒவ்வொன்றும் தொடர்ந்து தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு தங்களைத் தொடர்பெல்லைக்குள் நிலைநிறுத்திக் கொள்கின்றன. இதன் வழியாக, மற்றவைகளின் நிலை என்ன? ஒட்டுமொத் தமானவற்றின் நிலை என்ன? முதலியவற்றைத் தெரிவித்துக் கொள்ளுகின்றன. (இந்த இடத்தில் விண்வெளிக் கலத்தின் செயல்பாட்டினை மாணாக்கர்கள் எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம்.)
தொலைதூரக் கணிப்பியல்
ஒவ்வொரு தனி மனிதரும் (இன்றைக்கு) தன்னை அடமானப்படுத்திக் கொண்ட ஓர் இயந்திரத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகத்தான் உணர்கின்றனர்; குறிப்பாக முழுமை என்பதிலிருந்து தனித்த ஒரு சிறு துண்டு என்ற நிலையில்தான் தங்களை உணர்கின்றனர். மேலும் தாங்கள் தோன்றிய உலகத்திலிருந்து கணக்கிட்டுச் சொல்ல முடியாத ஒரு தூரத்தில் இருப்பதாகத்தான் உணர்கின்றனர்; மீண்டும் தாங்கள் தோன்றிய தாய்ப் பூமிக்குத் திரும்புவதற்காக எடையே அற்ற நிலையில் ஓர் உலோக அடைப்பிற்குள் இருக்கும், வான்வெளிப் பயணி போலத்தான் இங்கே அனைவரும் அக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த உலோக அடைப்பிற்குள் இருக்கும் அந்த எடையற்ற மனிதனின் நிலையை யார் துல்லியமாக உரைத்திட முடியும்?
இந்நிலையில் வாழ்தலிலிருந்து வெகுதூரம் விலகி வந்துவிட்டோம். அறிவியல் புனைகதைகளுக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டோம். இவற்றுக்கெல்லாம் காரணம், காலத்தையும் இடத்தையும் அதிகமாக நுண்ணளவில் (கருக்கிக்) காட்டக்கூடிய மின்னணுக் கருவிகளில் ஏற்பட்ட வளர்ச்சி மாற்றங்கள்தான். இவற்றுடன் மின்னியக்கம் செல்லும் நெறியும், அதன் ஆற்றலும் அடைந்துள்ள நுண்ணளவுத் தன்மைகள்தான், சுற்றுச்சூழல் கண நேரத்தில் அழிந்துபோகும் நிகழ்வாகும்.
இவைகள் எல்லாம் சேர்ந்து மனிதர்களின் இருப்பைப் பயனற்ற தன்மைக்குள் தள்ளிவிடுகின்றன. மனிதவழக்காறுகளின் அழிவிற்குள் அழ்த்திவிடுகின்றன. கிட்டத்தட்ட மனித வாழ்க்கையை நாற்றமெடுத்து வெறுக்கத் தக்கவைகளாக மாற்றுகின்ற இவைகளால்தான் நமது இன்றைய வாழ்வு நிரப்பப்படுகிறது.
சாதாரணமான ஒரு தொலைக்காட்சிப் பெட்டியினது வருகை, எந்த அளவிற்கு அந்தக் குடியிருப்பின் எஞ்சிய பகுதிகளை மாற்றிவிடுகிறது என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான் வெளியேயிருந்து யாரும் உள்ளே போக முடியாத ஒரு மூடிய உறையாக அந்த இடத்தையே மாற்றிவிடுகிறது. மேலும் பயனற்று அழிந்துபோன, இன்றைக்கும் பின்னமுற்றுக் குழப்பமாகக் கிடக்கின்ற மனித உறவுகளின் எச்சங்களாக அவைகள் வெளிப்படுகின்றன. இவ்வாறு மனிதர்களின் நடத்தைகள் அனைத்துமே குறிப்பிட்ட சில திரைக்காட்சிகளாகவும், குறிப்பிட்ட சில எல்லை முனைகளாகவும் சுருக்கப்பட்டு விடுகிற அந்தக் கணத்திலேயே எஞ்சி நிற்கிற உண்மை, ஒன்றுக்கும் பயன்படாத உடம்பு போலத்தான் ஆகிவிடுகின்றது.
இந்த நவீனச் சூழ்நிலையை, நுண்ணளவு (சுருக்கிவிடும்) காலகட்டம் என்றும், தொலைதூரத்திலிருந்து ஆணையிடும் காலகட்டம் என்றும், நம்முடைய மகிழ்ச்சி. உடம்பு, காலம் ஆகிய அனைத்தும் மிக நுட்பமான (சுருக்கமான) முறைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் காலகட்டம் என்றும் நாம் அழைக்கலாம்.
2.5. ஊடகங்களும் சமூகமயமாக்கலும்
தனது சுயத்தை, விரிவான சமூகத் தளத்திற்கு இணைவித்துக் கொள்ள, சமூக விழுமியங்களையும், நம்பிக்கைகளையும், பண்பாட்டின் மரபுகளையும் கற்று உள்வாங்கிக் கொள்ளும் முறையை வளர்த்துக் கொள்வதை சமூக மயமாதல் எனலாம். சமூகமயமாதல் மூலமாக, நாம் சமூகத்தில் ஆற்ற வேண்டிய குடிமகன், காதலி, தோழன். உழைப்பாளி, ஆசிரியை முதலான வாழ்க்கைப் பங்கினைச் சிறப்பாக ஆற்றக் கற்றுக் கொள்கிறோம். இதன் வழியாகப் பண்பாட்டு மரபுகளை உள்வாங்கிக் கொண்டு சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப நடந்துகொள்ள நம்மை நாமே ஆயத்தப்படுத்திக் கொள்கிறோம்.
குடும்பம், பள்ளிக்கூடம் ஆகிய சமூக நிறுவனங்கள் இளையோரைச் சமூகமயமாக்குவதில் வெளிப்படையான பங்கினை ஆற்றுகின்றன. குறிப்பாக நண்பர் குழாம் போன்றவை சமூகமயமாக்கலில் வலுவான பங்கினை ஆற்றுகின்றன.
இப்பின்னணியில், சமூகமயமாக்கலில் ஊடகங்களின் பங்கிளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. வளர்ந்த சமூகங்களிலும், வளர்முகச் சமூகங்களிலும், ஊடகங்கள் சமூகமயமாக்கலில் முக்கியப் பங்கினை எடுத்துக் கொண்டுள்ளன.
இந்த உலகத்தை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பதிலும், நாம் மற்றவர்களுடன் எப்படி உறவாடுகிறோம் என்பதிலும் ஊடகங்கள் முக்கியப் பங்கினைச் செலுத்துகின்றன. அவ்வகையில் ஊடகங்கள் சமூக நிறுவனங்களுக்கும் நமக்கும் இடையிலான உறவில் இடையீட்டாளராகச் செயல்படுகின்றன.
நாம் எதை அறிந்து கொண்டிருக்கிறோமோ அதற்கு ஊடகங்களையே சார்ந்திருக்கிறோம். அரசு குறித்த நமது அறிவு, செய்திகளின் அடிப்படையிலேயே அமைகிறதேயன்றி, அனுபவங்களின் அடிப்படையில் அமைவதில்லை அரசியல் விவாதங்கள் குறித்து நிபுணர்களின் பார்வையினூடாக, நாம் நாளேடுகளில் வாசித்தும் தொலைக்காட்சிகளைப் பார்த்தும் புரிந்து கொள்கிறோம்.
அரசியல்வாதிகள் தமது கருத்துக்களை மக்களுக்குத் தெரிவிக்க ஊடகங்களையே சார்ந்திருக்கின்றனர். குறிப்பாக ஒளிப்பரப்பாகும் விளையாட்டுகள் முதலானவற்றில் இது போன்ற இயக்க ஆற்றலே நிகழ்கிறது. இவ்வாறு நமது வழக்கமான குடும்ப நிகழ்வுகள், நட்புலக நிகழ்வுகளிலும் ஊடகம் ஒரு அங்கமாகிறது. குறிப்பாகப் பிறருடன் நமது உறவைத் தீர்மானிப்பதில் ஒருங்கிணைக்கும் சக்தியாகவோ, முரணுக்கான மூலமாகவோ விளங்குகிறது. இவ்வாறு ஊடகங்களின் உள்ளடக்கம் அல்லாது, அவற்றின் இயங்கு தன்மை மூலமாகவும், ஊடகங்கள் சமூகத்தின் மீதான விளைவைச் செலுத்துகின்றன.
ஊடகங்கள் பெரும்பாலும் நமது தனி வாழ்க்கைக்கும் பொது உலகிற்குமான இணைப்புப் பாலமாக விளங்குகிறது. நம்மை நாமே ஊடகங்களின் வழியாகப் பார்த்துக் கொள்கிறோம். சமூகத்தில் நமது இடத்தையும் ஊடகங்களின் வாயிலாகத் தெரிந்து கொள்கிறோம்.இதனால்தான், சமூகம் எப்படி இயங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஊடகங்களின், மீது நமது தனிக் கவனத்தைச் செலுத்த வேண்டிய தேவை எழுகிறது.
ஊடகங்கள் பல்வேறுபட்டதும் முரண்பாடானதுமான பணிகளைச் செய்கின்றன. வாசகர்களுக்கும், நேயர்களுக்கும் ஊடகங்கள் தகவல் தரும் கருவியாகவும் பொழுது போக்குக் கருவியாகவும் பயன்படுகிறது. ஊடகப் பணியாளர்களுக்கு வேலை தரும் தொழிலாக விளங்குகிறது. அதன் மூலம் அவர்களுக்கு வருவாய், அந்தஸ்து, தொழில் முறை அடையாளம் ஆகியவற்றைப் பெற்றுத் தருகிறது. ஊடக உரிமையாளர்களுக்கு அது லாபம் ஈட்டித் தருவதாகவும், அரசியல் அதிகாரத்திற்கான மூலமாகவும் விளங்குகிறது. சமூகத்திற்குத் தகவலையும், சமூக விழுமியங்களையும் கடத்தும் கருவியாகவும் விளங்குகிறது.
ஊடகங்கள் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் விளைவுகளைப் புரிந்து கொள்ளக் கீழ்க்காணும் கேள்விகளுக்கு விடை தேட முற்படுங்கள்.
- ஊடகங்களின் உரிமையாளர்கள் யாவர்? ஊடக உரிமையாளர்கள் குறித்து நாம் என் கவனிக்க வேண்டியிருக்கிறது?
- எவ்வாறு ஊடகப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன?
- ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதில் அரசின் பங்கு வேண்டும்?
- என்னவாக இருக்க என் சில பிம்பங்களும் கருத்துருக்களும் ஊடகங்களில் அதிக இடங்களை ஆக்கிரமிக்கின்றன?
- சிலவற்றை ஊடகங்கள் ஒதுக்குவது என்?
- யாருடைய குரல்கள் ஊடகங்களில் ஒலிப்பதில்லை?
- ஊடகங்களின் வளர்ச்சி எவ்வாறு அரசியல் இயங்குதலில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது?
- பொதுமக்கள் எவ்வாறு ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள்? எவ்வாறு விளங்கிக் கொள்கிறார்கள்?
- தொழில்நுட்ப மாற்றங்கள் எவ்வாறு ஊடகங்களைப் பாதிக்கின்றன?
- ஊடகங்கள் உலகமயமாகி வருவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன?
2.6 ஊடகங்களின் பரபரப்பூட்டும் தன்மை
24 மணிநேரச் செய்திச் சேவைத் தொலைக் காட்சிகளின் வருகைக்குப் பின் ஊடக உலகில் பரபரப்புக்குக் குறைவே இல்லை என்றால் அது மிகை இல்லை ஊடகங்களின் பரபரப்பூட்டும் தன்மை குறித்த ஒரு ஆய்வைக் கவனியுங்கள்.
- வில்லியம் ஜெபர்சன் கிளின்டன் என்ற அமெரிக்க ஜனாதிபதியைப் பற்றி நீங்கள் அறிந்தவற்றை நினைவுபடுத்திச் சொல்லுங்கள் என்றால், உங்கள் மனதில் உடனடியாகத் தோன்றுவது என்ன?
- கல்வி குறித்து அவர் வகுத்துக் கொண்ட கொள்கைகளா?
- அவரது ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட வெளியுறவுக் கொள்கைகளா?
- அல்லது வெள்ளை மாளிகையில் உள்ளகப் பயிற்சி பெற்று வந்த மோனிகா லெவின்ஸ்கி என்ற பெண்ணுக்கும் அவருக்கும் இருந்ததாகக் கூறப்பட்ட உறவு நிலையா?
துரதிர்ஷ்டவசமாக, மோனிகா உறவு குறித்த தகவல்கள்தான் நமது நினைவில் இருந்து ஊடகங்களின் பரபரப்பூட்டும் உடனடியாக வெளிப்படுகின்றன. இதற்கு தன்மையையே முக்கிய காரணமாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பரபரப்பூட்டும் தன்மை மூலம் ஊடகங்கள் அரசு குறித்தும் அரசின் கொள்கைகள் குறித்துமான விவாதங்களில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பி,வாழ்வு முறை, பிரபலங்கள், பொழுதுபோக்கு, குற்றவியல், பாலுணர்வைத் தூண்டும் நிகழ்வுகள் முதலானவற்றில் கவனக் குவிப்பை நிகழ்த்துகின்றன.
மேலும் வெகுசனங்களைப் பாதிக்கும் கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசியப் பிரச்னைகள் இந்தப் பரபரப்புகளினால் பின்னுக்குத் தள்ளப்பட்டு கவனத்தை ஈர்க்க இயலாது போகின்றன.
நாம் தகவல் பெறும் மூலத்தைப் பொறுத்து சமூகம் குறித்த நமது பார்வையின் தன்மை மாறுபடும். முன்னுரிமைத் தரப்பட வேண்டியிராத தகவல்களை முன்னுரிமைப்படுத்தும் போது, அத்யாவசியமான தகவல்கள் பின்னுக்குத் தள்ளப் படுவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது.
இதனால், மக்களை அதிகம் பாதிக்கும் விசயங்கள் விவாதத்திற்கு வராமல் போகும் சூழல் ஏற்படுகிறது. இது மக்கள் கருத்துருவாக்கத்திற்கு இடையூறாகவும், அதனால், உரிய கொள்கைகள் முறையாக வகுக்கப்பட இயலாத சூழலும் உருவாகிவிடுகிறது.
1996 அமெரிக்க ஜனாதிபதி பொதுத் தேர்தல்கள் முடிந்தவுடன், பிரச்சாரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து விவாதங்கள் தொடங்கின. நிதியைப் பெருக்குவதற்காக சட்டங்கள் வளைக்கப்பட்டதும், பல சட்ட விரோத நிகழ்வுகள் அரங்கேறி யிருப்பதும் தெரிய வந்தது. அதே வேளையில் தான் மோனிகா லெவின்ஸ்கி விவகாரம் பெரிய அளவில் ஊடகங்களால் விவாதிக்கப்பட்டதால், பொதுத் தேர்தலின்போது சட்ட விரோதமாக நடந்த நிகழ்வுகள் குறித்த செய்திகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன.
அமெரிக்காவில் இவ்வாறான சூழல் நிலவ என்ன காரணம்? பெரு வணிக நிறுவனங்களின் வணிக நோக்கம் ஒரு காரணம் என்று வாதிடப்படுகிறது. 'கார்ப்பொரேட் ஒனர்ஷிப் தியரி் என்று இதை அழைக்கிறார்கள். ஜெனெரல் எலக்ட்ரிக்கல், டைம் வார்னர், வால்ட் டிஸ்னி போன்ற பெரும் வணிக நிறுவனங்கள் தாம், அமெரிக்காவின் சக்தி வாய்ந்த டெலிவிஷன் நெட்வொர்க்குகளைத் தம் கைவசம் வைத்துள்ளன.
மேற்கண்ட வணிக நிறூவனங்களின் முதலாளிகள் இடும் கட்டனைக்கு ஏற்பவே இந்தச் செய்தி நிறுவனங்களில் பணிபுரியும் செய்தியாளர்கள் செய்திகளை உருவாக்கு கிறார்கள் என்று விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் தமது வணிகத்தைப் பாதிக்கும் செய்திகளை வெளியிடாமல் பார்த்துக் கொள்வதே அந்த நிறுவனங்களின் சந்தைப்படுத்தும் உத்திகளுள் ஒன்றாகிவிடுகிறது.
இங்குதான் பரபரப்பூட்டும் செய்திகளை வெளியிடும் தேவை எழுகிறது. பாலுணர்வுச் செய்திகள், சினிமா நட்சத்திரங்கள் குறித்த செய்திகள், பிரபலங்களின் அந்தரங்கம் குறித்த செய்திகள் போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, மக்களாட்சியில் வெகுஜனக் கருத்துருவாக்கம் செய்யப்பட வேண்டியவறைப் பின்னுக்குத் தள்ளுவதும் இந்த உத்தியில் அடங்கும்.
கென் சேன்ஸ் என்ற ஆய்வாளர், 'செய்தி ஊடகங்கள் முக்கியமான உண்மைகளை மறைக்க மேற்கொள்ளும் முயற்சிகள்' என்ற கட்டுரையில் இது குறித்து விரிவாக விளக்குகிறார்.